ஆம்பன் புயல் நாளை மதியம் மேற்கு வங்கத்தில் கரையை கடக்கவுள்ளது.
New Delhi: ஆம்பன் புயல் தடுப்பு நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 41 குழுக்கள் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவுக்கு விரைந்துள்ளன. மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
நாடு ஏற்கனவே கொரோனா என்ற பேரிடரால்பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக ஆம்பன் என்ற சூப்பர் புயலை எதிர்கொள்ள உள்ளது. முக்கியமாக மேற்கு வங்கம், ஒடிசாவில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே, கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். வீடுகளையும், லேசான பொருட்களையும் தாக்கும் சக்தி ஆம்பனுக்கு உண்டு என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நாளை மதியம் மேற்கு வங்கத்தில் ஆம்பன் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகத்திற்கு பலத்த காற்று வீசக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 41 குழுக்கள் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவுக்கு விரைந்துள்ளன.
தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு ஏற்கனவே ஃபானி புயலை கையாண்ட அனுபவம் உண்டு. அது தற்போது ஆம்பனை எதிர்கொள்ள உதவும் என தேசிய பேரிடர் மீட்பு படை தலைவர் எஸ்.என். பிரதான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக 1990-ல் ஒடிசா மாநிலம் சூப்பர் புயலை எதிர்கொண்டது. இதன்பின்னர் சுமார் 20 ஆண்டுகள் கழித்து மற்றொரு சூப்பர் புயல் கரையை கடக்க நெருங்கி வருகிறது.
ஆம்பன் புயலால் மேற்கு வங்கம், ஒடிசா, வங்கதேசம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.