வங்கத்தில் கரையை கடக்க துவங்கியது ஆம்பன் புயல்.
ஹைலைட்ஸ்
- வங்கக் கடலில் உருவான ஆம்பன் புயல் மேற்கு வங்கத்தில் கரையை கடந்தது
- சில மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பேய் மழை பெய்து வருகிறது
- ஆம்பனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு விவரங்கள் விரைவில் தெரியவரும்
New Delhi: வங்கக் கடலில் உருவான மிக மோசமான புயலில் ஒன்றாக ஆம்பன் புயல் நேற்று மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்திற்கு இடையே கரையை கடந்தது. ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள், கட்டிங்களை சேதப்படுத்தியுள்ளது ஆம்பன் புயல். இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக மேற்கு வங்கம் தெரிவித்துள்ளது. ஆம்பன் புயல் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான பொருளாதார சேதத்தினை ஏற்படுத்தியிருக்கும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். இது கொரோனா தொற்றை காட்டிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 30 கி.மீ விட்டம் கொண்ட சூறாவளி காற்றானது, 185 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது. அப்போது கடல் அலைகள் 15 அடி உயரம் வரை எழும்பியுள்ளது. மேற்கு வங்கத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் மற்றும், ஒடிசாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா, இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கையானது 12 ஆக உயர வாய்பிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாநிலத்தின் வடக்கு பகுதிகள் மற்றும், தெற்கு 24 பர்கானாஸ் அதிக அளவு பாதிப்பை சந்தித்துள்ளதாக கூறியுள்ளார். தற்போது ஆம்பன் ஏறப்படுத்தியுள்ள பாதிப்பினால் மேற்கு வங்கத்தினை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பலத்த காற்றினால் மரம் சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். அதேபோல ஹவுரா மாவட்டத்தில் மரம் சரிந்து வீழ்ந்ததில் 12 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
- 24 பர்கானாஸ் மாவட்டத்தினை பொறுத்த அளவில் 2 உயிரிழப்புகளோடு, ஏறத்தாழ 5,500 வீடுகள் ஆம்பன் புயலால் சேதமைடைந்துள்ளன. மேலும் இருவர் மோசமான நிலையில் உள்ளனர் என பசிர்ஹாட்டின் துணை பிரதேச அதிகாரி(Sub-Divisional Officer) பிபெக் வாஸ்மே தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. மேலும், இம்மாவட்டதின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
- மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவை பொறுத்த அளவில், நேற்று முழுவதும் 100கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியுள்ளது. பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் நகரமே இருளில் முழ்கியது. சாலைகளிலும் வீதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
- தெற்கு கொல்கத்தாவின் பல பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் பலத்த காற்றினால் ஒன்றோடு ஒன்று மோதும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வீடியோக்களாக வெளிவந்துள்ளது. மேலும், டிரான்ஸ்பார்மர்கள் வெடிப்பதையும் வீடியோக்களில் காண முடிகிறது.
- மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்திற்கு இடையே கரையை கடந்த ஆம்பன் புயல் 185 கி.மீ வேகத்தில் காற்றுடன் கடந்தது என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
- சூப்பர் புயலிலிருந்து வலுவிழந்து மிகக் கடுமையான புயலாக மாறி பின்னர் கரையை கடந்தது ஆம்பன். இதன் காரணமாக மேற்கு வங்கம், ஒடிசா, வங்க தேசத்தில் கன மழை பெய்தது.
- முன்னதாக, தேசிய பேரிடர் மீட்பு படைத்தலைவரான பிரதாபன், “இந்த புயல் தற்போது இரட்டை சவாலை கொடுத்துள்ளதாக“ தெரிவித்தார். கொரோனா தொற்று மற்றும், ஆம்பன் புயல் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் கையாள வேண்டும். இதில் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தனி மனித இடைவெளியுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரதாபன் கூறியிருந்தார்.
- மேற்கு வங்கத்தில் கொல்கத்தா விமான நிலையம் நேற்று காலையிலிருந்தே மூடப்பட்டிருந்தது. இம்மாநிலத்தில் 7 மாவட்டங்கள் ஆம்பன் புயலின் நேரடி தாக்கத்தினை எதிர் கொண்டன. ஒடிசாவின் பாரதீப் மற்றும் மேற்கு வங்கத்தின். 24 பர்கானாஸ் போன்ற பகுதிகளில் பலத்த காற்று வீசியது.
- உம்-பான் என்று அழைக்கப்படும் ஆம்பன் புயலுக்கு தாய்லாந்து பெயர் சூட்டியது. ஆம்பன் எனில் வானம் என்று பொருள்படும். இந்த புயலை விசாக்பட்டினம் டப்ளர் ரேடர் தொடர்ந்து கண்காணித்து வந்தது.