மே.வங்கத்தை புரட்டி எடுத்த ஆம்பன் புயல்: வெள்ளத்தில் மிதக்கும் கொல்கத்தா விமான நிலையம்!
New Delhi: ஆம்பன் புயல் கரையை கடக்கும்போது சுமார் ஆறு மணி நேரம் பலத்த மழையுடன், சூறாவளி காற்று வீசியதால் கொல்கத்தா விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும், அதன் கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மணிக்கு 120 கி.மீ வேகத்தில் காற்று வீசிய நிலையில், கனமழை பெய்ததாலும், ஒரு பேரழிவுக்கான தடயங்களை ஏற்படுத்தியது. இதனால், 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து, கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து வரும் காட்சிகள், கட்டிடங்கள், ஓடுபாதைகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதை காட்டுகின்றன. தொடர்ந்து, விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் இன்று காலை 5 மணி வரை மூடப்பட்டிருந்தன.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மார்ச்.25ம் தேதி முதல் பயணிகள் விமான சேவையும் நிறுத்தப்பட்டன. எனினும், சரக்கு மற்றும் மீட்பு பணிக்கு செல்லும் விமானங்கள் மட்டும் தற்போது இயங்கி வந்தன.
நேற்று பிற்பகல் 2.30 மணி முதல் ஆம்பன் புயல் வங்கத்தை புரட்டி எடுக்க துவங்கியது. இதனால், சாலைகளில் மரங்கள் வேருடன் சரிந்தன, மின் இணைப்புகள் சேதமடைந்தன. தொடர்ந்து, கொல்கத்தா மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் பல கட்டிடங்களும் இடிந்து விழுந்தன.
இது ஒரு பேரழிவு என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். புயல் பாதிப்பின் போது, மம்தா அவரது அலுவலகத்திலே இருந்தார்.
ஆம்பன் புயலின் தாக்கம் கொரோனா வைரஸ் தொற்றுநோயை விட மோசமானது என்றும், மாநிலத்தில் புயலால் ஏற்பட்ட சேதங்கள் ரூ.1 லட்சம் கோடி வரை இருக்கலாம் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ், மித்னாப்பூர், ஹூக்லி, மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட மாவட்டங்களை ஆம்புன் புயல் கடந்து சென்றது.
1999 ஆம் ஆண்டு ஒடிசாவைத் தாக்கி சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்த சூப்பர் புயலுக்கு பின்னர் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மிக மோசமான இரண்டாவது "சூப்பர் புயல்" இதுவாகும்.