Cyclone Amphan Live Update: கரையை கடக்க துவங்கியது ஆம்பன் புயல்: பலத்த காற்று, கனமழை!
New Delhi: ஆம்பன் புயல் குறித்த நேரலை தகவல்கள்:
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் புயல் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
மேற்கு வங்கத்தின் 24 பர்கனாஸ் பகுதியில் சூறைக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
ஆம்பன் புயல் தாக்குதலுக்கு மேற்கு வங்கத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக பி.டி.ஐ.செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
கடலோர பகுதிகளை புயல் தாக்கும்போது 4 - 5 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்ப வாய்ப்புள்ளது. இது 24 பர்கனாஸில் நடக்கும். மித்னாப்பூரில் அலைகளின் உயரம் 3 - 4 மீட்டராக இருக்கலாம்.
செல்லும் வழியில் எத்தகைய பாதிப்பையும் உண்டாக்கும் ஆற்றல் ஆம்பன் புயலுக்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் பிரதான் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் 20 குழுக்களும், மேற்கு வங்கத்தில் 19 குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளனர்.
விமானம் மூலம் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு 24 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
ஒடிசாவின் பத்ராக் மற்றும் பாலசோர் மாவட்டங்களில் சுமார் 2-3 மணி நேரத்திற்கு புயலின் தாக்கம் இருக்கும் என்றும் மற்ற இடங்களில் பாதிப்பு இருக்காது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தா அருகே மணிக்கு 110 - 135 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
மேற்கு வங்கத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமானோரும், ஒடிசாவில் 1.50 லட்சத்திற்கும் அதிகமானோரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் பிரதான் தெரிவித்துள்ளார்.