Cyclone Amphan: வங்காளம் மற்றும் ஒடிசா கடற்கரையில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- சூப்பர் புயலாக உருவான ஆம்பன் புயல் படிப்படியாக வலுவிழந்தது!
- நேற்றைய தினம் சூப்பர் புயலாக ஒருவெடுத்தது ஆம்பன் புயல்
- ஒடிசாவின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும்
New Delhi: சூப்பர் புயலாக உருவான ஆம்பன் புயல் படிப்படியாக வலுவிழந்து அடுத்த 6 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறிவிடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் திகா மற்றும் வங்கதேசத்தில் சுந்தரவனக் காடுகளை ஓட்டியுள்ள தீவில் நாளை மாலை கரையை கடக்கும் என தெரிகிறது.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை உயர்மட்ட அதிகாரிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார்.
நேற்றைய தினம் சூப்பர் புயலாக உருவெடுத்த ஆம்பன் புயல், இன்று காலை 5.30 மணி நிலவரப்படி, ஒடிசா கடற்கரைக்கு 520 கி.மீ தொலைவிலும், மேற்குவங்கத்தின் திகாவுக்கு 670 கி.மீ இடையே வந்து கொண்டிருந்தது.
ஆம்பன் புயல் நாளை மேற்குவங்கத்தை அடையும் போது, 180 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இதனால், இன்றும் நாளையும் வங்காளம் மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
ஆம்பன் புயல் கடலில் கடுமையான சூழலுக்கு வழிவகுக்கும். இதனால், வியாழக்கிழமை வரை வங்காளம் மற்றும் ஒடிசா கடற்கரையில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒடிசா மற்றும் வங்காளத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 32 அணிகள் பணியில் உள்ளன. அதில், 21 அணிகள் காத்திருப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஆம்பன் புயல் மிகவும் தீவிரமான புயல், இது பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் எம்.மொஹாபத்ரா தெரிவித்திருந்தார்.
ஆம்பன் புயல் கொல்கத்தா நகருக்கு தென்கிழக்கே கடலில் 700 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது வானிலை மையம்.