This Article is From May 18, 2020

சூப்பர் புயலாக மாறும் ஆம்பன்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை!

Cyclone AMPHAN: ஒடிசாவில், தேசிய பேரிடர் மீட்புப் படையே சேர்ந்த (NDRF) 17 குழுவினர் பணியில் உள்ளனர்.

ஆம்பன் புயல் வங்கதேச கடற்கரை பகுதியில் புதன்கிழமையன்று கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

New Delhi:

ஒரே இரவில் அதி தீவிர புயலாக மாறிய ஆம்பான் புயல், அடுத்த 12 மணி நேரத்தில் "சூப்பர் புயலாக" தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளதால், மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த புயல் வங்கதேச கடற்கரை பகுதியில் புதன்கிழமையன்று கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,தீவிர புயலான ஆம்பன், வங்ககடலின் தென்கிழக்குப் பகுதியிலிருந்து, வடக்கு, வடக்கிழக்காக கடந்த 6 மணிநேரத்தில் 13 கி.மீ வேகத்தில் சென்று வருகிறது. இது மேலும் தீவிரமடைந்து, அதி தீவிரப்புயலாக உருவெடுத்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இன்று மாலை 4 மணி அளவில் உயர்மட்ட அளவில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு ஒடிசாவில் ஃபானி புயல் பாதிப்பு ஏற்பட்ட போது, 11 லட்சம் பேரை பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து மீட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, கஞ்சம், கஜப்தி, பூரி, ஜகத்சிங்க்பூர், கேந்திரபாரா, பத்ரக், பாலசோர், மயூர்பஞ்ச், ஜஜ்பூர், கட்டாக், குர்தா மற்றும் நாயகர் உள்ளிட்ட 12 கடலோர மாவட்டங்களில் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. 

இதுதொடர்பாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உயர் அதிகாரிகளிடம், சாலை தொடர்பு துண்டிக்கப்பட்ட உபகுதிகளில், குடிநீர் வழங்கல், மின்சாரம், உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவமனைகளுக்கான மின்சாரம் உள்ளிட்டவற்றை உடனடியாக மீட்டெடுப்பதோடு, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றுவதற்கான திட்டங்களை வரையறுக்கவும் அறிவுறுத்தியுள்ளார். எப்போதும் போல், உயிர்களைக் காப்பாற்றுவதற்கே நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். ஒவ்வொரு வலைமதிப்பற்ற மனித உயிர்களை காப்பாற்றுவதற்கு நாம் சிறந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

ஒடிசா, மேற்குவங்கத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையே சேர்ந்த (NDRF) 17 குழுவினர் பணியில் உள்ளனர். 7 குழுவினர் மேற்குவங்கத்தில் உள்ள 6 மாவட்டத்திலும், 10 குழுவினர் ஒடிசாவிலும் பணியில் உள்ளளனர். ஒவ்வொரு குழுவிலும் 45 நபர்கள் உள்ளனர். 

இந்த புயலால் ஒடிசாவின் வடக்கு பகுதியிலே அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மோகபத்ரா கூறியுள்ளார். 

மேற்கு வங்கம் - ஒடிசா கடற்கரைகளிலும், வடக்கு வங்கடல் பகுதிகளிலும் புதன்கிழமை வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

.