டாயே புயலால் பாதிக்கப்பட்ட 150 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்
New Delhi: ஒடிசா மாநிலத்தில் ‘டாயே’ என்னும் புயல், தெற்கு ஒடிசாவிலும் ஆந்திர கடற்கரையை ஒட்டியும் இன்று கரையைக் கடந்துள்ளது. கோபால்பூர் அருகே இன்று பலத்தக் காற்றுடன் கரையைக் கடந்துள்ள டாயே புயலால், ஒடிசாவின் பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம், கஜபதி, கஞ்சம், புரி, ராயாகாடா, காலஹண்டி, கோராபுட், மல்கான்கிரி, நப்ரங்பூர் ஆகிய ஒடிசா மாநிலங்களில் இன்று கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், முக்கிய அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். அனைத்துத் துறைகளையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அவர் அப்போது தெரிவித்ததாக கூறப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்துக்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கடலோர மாவட்டங்களில் இருக்கும் அதிகாரிகளுக்கு, அவசர நிலைக்கு ஏற்றாற் போல தயாராக இருக்க உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
புபனேஷ்வர் வானிலை ஆய்வு மைய இயக்குநர், ‘டாயே புயல் சற்று வலுவிழந்துள்ளது. அது வடக்கு நோக்கியும் வடமேற்கு நோக்கியும் நகர்ந்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒடிசாவில், டாயே புயலின் தாக்கம் இருக்கும். ஆனால், மிகக் கனமழை பெய்ய வாய்ப்புகள் குறைவு’ என்று தகவல் தெரிவித்துள்ளார்.