தலைநகர் புவனேஸ்வரத்தில் ரயில்வே மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.
Bhubaneswar: ஒடிசாவில் ஃபனி புயலுக்கு மத்தியில் கர்ப்பிணி ஒருவர் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ஃபனி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஃபனி புயலின் கோர தாண்டவத்திற்கு ஒடிசாவின் கடலோர மாவட்டங்கள் இரையாகி வருகின்றன. இன்று காலை முதல் அங்கு பெரும் காற்று வீசி வருகிறது. மரங்கள், மின் கம்பங்கள் பேருடன் சாய்ந்து வருகின்றன.
முன்னெச்சரிக்கையாக 11 லட்சம்பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கர்ப்பிணிகள் 600-க்கும் அதிகமானோருக்கு உரிய முறையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவசர நிலையை கருத்தில் கொண்டு 500 ஆம்புலன்சுகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே தலைநகர் புவனேஸ்வரத்தில் ரயில்வே மருத்துவமனையில் 32 வயது கர்ப்பிணி ஒருவர் இன்று அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்களின் சிறப்பான பணியால் அந்த கர்ப்பிணி பெண் குழந்தை ஒன்றை காலை 11:03 -க்கு பெற்றெடுத்தார். ஒடிசாவை ஃபனி புயல் அடித்து நொறுக்கி வரும் நிலையில், புயலின் நினைவாக பெண் குழந்தைக்கு ஃபனி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பெண் ஒரு ரயில்வே ஊழியர் என்றும், தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபனி புயல் பாதிப்புக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். புரி நகரம் கடும் சேதம் அடைந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் மிகவும் சக்தி மிக்க புயலாக கருதப்படும் ஃபனி, தற்போது ஒடிசாவின் வழியே மேற்கு வங்கத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.