Cyclone Fani: கடற்படை மற்றும் விமானப்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
New Delhi: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபனி (Fani) புயலானது அதி தீவிரப்புயலாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக ஒடிசா, தமிழகம், ஆந்திர உள்ளிட்ட கடலோர பகுதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவசர நிலை ஏற்படும் பட்சத்தில், மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் மேற்கொள்ள கடற்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, கடற்படையை சேர்ந்த படகுகள் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் நிவாரண உதவிகளை அளிக்கவும், மக்களை வெளியேற்றவும், நிவாரண பொருட்களை எடுத்துச்செல்லவும் தயார் நிலையில் உள்ளன. அந்த படகுகளில் கூடுதல் மருத்துவர்கள், ரப்பர் படகுகள், உணவு, கூடாரம் அமைக்க தேவையான பொருட்கள் உள்ளிட்ட அனைத்து நிவாரண பொருட்களும் போதுமான அளவில் வைக்கப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள ஃபனி புயல், தற்போது, கடுமையான புயலாக உருவெடுத்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, ஒடிசாவின் புரி நகரிலிருந்து தென்மேற்கே 730 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புயல், 22 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்தப் புயல் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் வரும் 3 ஆம் தேதி பிற்பகல் ஒடிசாவின் கோபால்புர் மற்றும் சந்த்பாலி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபனி புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 205 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுக் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.