Cyclone Fani Status: ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கடற்கரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபனி (Fani) புயலானது அதி தீவிரப்புயலாக வலுப்பெற்று ஒடிசாவிற்கு 450 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஃபனி புயலானது கடந்த 6 மணி நேரத்தில் ஒடிசாவை நோக்கி மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேலும், ஃபனி புயல் நாளை மாலையில் ஒடிசா கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒடிசாவில் 19 மாவட்டங்களிலும், மேற்குவங்கம் மற்றும் ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் ஃபனி புயல் தாக்கும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக கிழக்கு கடற்கரை ரயில்வே 22 ரயில்களை ரத்து செய்துள்ளது. அதி தீவிரப்புயலாக ஃபனி கரையை கடக்கும் போது காற்றின் வேகம் 170 - 180 கி.மீ வேகத்தில் வீசலாம் என்றும் அதிகபட்சமாக 195 - 200 கி.மீ வேகத்திலும் காற்று வீசலாம் என்று கூறப்பட்டுள்ளது.
வானிலை மையத்தால் ஒடிசா, மேற்குவங்கம் மாநிலத்திற்கு நேற்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டது. இதேபோல், ஆந்திராவில் 3 மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஒடிசா அரசு இன்று முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது. மேலும், கடற்கரை பகுதிகளில் உள்ள 8 லட்சம் மக்கள் வரை பாதுகாப்பான இடங்களுக்கு பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், மீனவர்கள் மே.1 முதல் மே.5 வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மே 15-ம்தேதி வரைக்கும் ஒடிசாவில் அரசு மருத்துவர்களுக்கு விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுப்பில் சென்ற காவலர்கள் பணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் 28 குழுக்களை ஒடிசாவுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் 30 படைகள் தயார்நிலையில் இருக்கின்றன.
போர்க்கால அடிப்படையில் மக்களை வெளியேற்றும் பணி ஒடிசாவின் புரி, ஜெகத்சிங்பூர், கேந்திரபாரா, பத்ராக், பாலசோர், மயுர்பஞ்ச், கஜபதி, கஞ்சம், கோர்தா, கட்டாக், ஜொஜ்பூர் ஆகிய மாவட்டங்களில் நடந்து வருகிறது.
முன்னெச்சரிக்கையாக 89 ரயில்களின் சேவையை இந்திய ரயில்வே ஒடிசாவில் நிறுத்தி வைத்துள்ளது.
புவனேஸ்வரத்திலிருந்து செல்லும் விமானங்களை கோ ஏர் நிறுவனம் ரத்து செய்துள்ளது. மே 3-ம்தேதி ஒடிசாவில் ஃபனி புயல் கரையை கடக்கிறது.
வடக்கு ஆந்திராவில் கன மழை பெய்யத் தொடங்கி உள்ளது. ஸ்ரீகைகுளம் மாவட்டத்தில் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை ஒடிசாவின் புரியில் கரையை கடக்கிறது ஃபனி புயல்.
ஃபனி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், அதிகாரிகளுக்கு இணங்க அரசு அலுவர்கள் செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
Cyclone Fani: 500 ஒஎன்ஜிசி தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய எண்ணை உற்பத்தி நிறுவனமான ஒஎன்ஜிசி வங்ககடலில் அருகே உள்ள எண்ணை கிடங்குகளில் பணிபுரிந்து வந்த 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒடிசாவில் கடலோர பகுதியில் நாளை ஃபனி புயல் கரையை கடக்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு புரியில் இருந்து ஹவுராவுக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 11 மாவட்டங்களில் உள்ள 8 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதற்காக 880க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.
தேசிய பேரிடர் மீட்பு படையானது, 28 குழுக்களை ஒடிசாவிற்கும், ஆந்திராவிற்கு 12 குழுக்களையும், மேற்குவங்கத்திற்கு 6 குழுக்களையும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அனுப்பி வைத்துள்ளது. மேலும், 30 குழுக்குள் படகுகள், தொலைத்தொடர்பு உபகரணங்கள், மரம் வெட்டும் இயந்திரங்கள் உள்ளிட்டவைகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஒடிசாவின் தெற்கு கடலோர பகுதி மற்றும் அதன் உட்புர பகுதியில் இன்ற கனமழை முதல் மிக கனமழை பெய்யும். நாளை 11 கடலோர மாவட்டங்களிலும், அதன் உட்பர பகுதிகளிலும் மிக கனமழை பெய்யவுள்ளது என புவனேஸ்வர் வானிலை மையம் இயக்குநர் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.
அடுத்த மூன்று நாட்களுக்கு ஒடிசாவில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.