மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை ஏற்பாட்டை செய்து வருகின்றன.
ஃபனி புயலை எதிர்கொள்ள 54 குழுக்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் அமைத்துள்ளனர். நாளை ஒடிசாவின் புரி வழியே புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதனை எதிர்கொள்வதற்கு முழு வீச்சில் மத்திய மாநில அரசுள் தயாராகி வருகின்றன.
வங்கக் கடலில் உருவான ஃபனி புயல் தமிழகத்திற்கு மழையை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரும் ஏமாற்றத்தை மட்டுமே பரிசாகத் தந்துள்ளது. இந்தப் புயல் நாளை ஒடிசா வழியே கரையை கடக்கிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
175 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதலில் தெற்கு புரியை தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படை, ஒடிசா அதிரடிப்படை உள்ளிட்டவையும் புயலை எதிர்கொள்ள தயாராகியுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையினர் 28 குழுக்களை ஒடிசாவுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் 30 படைகள் தயார்நிலையில் இருக்கின்றன. முன்னெச்சரிக்கையாக 89 ரயில்களை ரத்து செய்து இந்திய ரயில்வே நடவடிக்கை எடுத்தள்ளது.
மே 15-ம்தேதி வரைக்கும் ஒடிசாவில் அரசு மருத்துவர்களுக்கு விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுப்பில் சென்ற காவலர்கள் பணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். தற்காலிகமாக 880 புயல் பாதிப்பு மையங்கள் கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் புயலை எதிர்கொள்வதற்காக 54 குழுக்களை பேரிடர் மீட்பு படையினர் அமைத்துள்ளனர். இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்பு படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், '' அமைக்கப்பட்ட குழுக்களில் மருத்துவர்கள், மருந்தியலாளர்கள், பொறியாளர்கள், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். படகுகள், நீர் மூழ்கி, தொலைத் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவை தேசிய பேரிடர் மீட்பு படை அமைத்த குழுவில் இருக்கின்றன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.