10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
Bhubaneswar: ஒடிசாவில் ஃபனி புயல் (Cyclone Fani) அடித்து நொறுக்கி வரும் அதே நிலையில், மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. 600 கர்ப்பிணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இன்று காலை சரியாக 8 மணிக்கு ஒடிசாவை ஃபனி புயல் (Cyclone Fani) தாக்கத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்றில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்து வருகின்றன.
குறிப்பாக புரி நகரில் பாதிப்பு மிகக் கடுமையாக உள்ளது. மின் வயர்கள், டெலிபோன் வயர்கள் துண்டாகியுள்ளன. விமான நிலையத்தை மறு உத்தரவு வரும் வரையில் திறக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
புயல் பாதிப்பு கட்டுக்கு கொண்டு வரப்படும் வரையில், பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுவரைக்கும் 11 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால் அவர்களை மிகுந்த கவனத்துடன் மீட்பு படையும், சுகாதாரத்துறையும் கையாண்டு வருகிறது. 600-க்கும் அதிகமான கர்ப்பிணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அவசரத்திற்கு 500 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 242 மருத்துவமனைகளில் பவர் சப்ளை தொடர்ந்து வழங்கப்படுகிறது. மருத்துவர்களுக்கு மே 15 வரைக்கும் விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.