மின்சாரம், குடிநீர் வசதி இல்லாததால் மக்கள் போராட்டத்தில் குதிக்கத் தொடங்கியுள்ளனர்.
Bhubaneswar: ஃபனி புயல் தாக்கம் காரணமாக ஒடிசாவில் கடந்த 8 நாட்களாக மக்கள் மின்சாரம் மற்றும் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். இதனால் புயல் பாதிப்பு பகுதியில் மக்கள் அவ்வப்போது போராட்டத்தில் குதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஃபனி புயல் கடந்த 3-ம்தேதி ஒடிசாவை தாக்கியது. இதில் லட்சக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்சாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தலைநகர் புவனேஸ்வரத்தில் 50 சதவீத மக்களுக்கு மட்டுமே மின்சாரம் திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளது.
குடிநீர் விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் போராட்டத்தில் குதிக்கத் தொடங்கியுள்ளனர். தலைநகர் புவனேஸ்வரத்தில் மட்டும் 1.56 லட்சம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன.
போராட்டம் குறித்து பதில் அளித்துள்ள மின்சாரத்துறை உயர் அதிகாரிகள், போராட்டக்காரர்கள் தங்களை தாக்கி விடுவார்களோ என அஞ்சுவதாக கூறியுள்ளார். ஒடிசாவின் நிவாரணத்திற்காக மத்திய அரசின் தரப்பில் ரூ. 1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.