சாலையில் தஞ்சம் அடைந்துள்ள இளைஞர்கள்
Bhubaneswar: ஒடிசாவில் வீசும் ஃபனி புயலால் அங்குள்ள வீடுகள் அதிரத் தொடங்கின. இதையடுத்து பாதுகாப்பிற்காக அங்குள்ளவர்கள் தெருக்களை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.
வங்கக் கடலில் கடந்த சில நாட்களாக மையம் கொண்டிருந்த ஃபனி புயல், இன்று மாலை ஒடிசாவில் கரையை கடந்தது. மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதால், பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
அடித்த புயலுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். மின் கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவை வேருடன் சாய்ந்துள்ளன. முன்னெச்சரிக்கையாக 11 லட்சம்பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். குறிப்பாக கர்ப்பிணிகள் 600 பேருக்கு பாதுகாப்பான இடம் வழங்கப்பட்டுள்ளது.
வீடு மற்றும் கட்டிடத்தின் லேசான கூரைகள் புயல் காற்றில் பறந்து வருகின்றன. இதற்கிடையே புவனேஸ்வரத்தில் ஃபனி புயல் 200 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. இதனால் வீடே அதிர்ந்ததாக தெரிவித்துள்ள மக்கள், பாதுகாப்புக்காக தெருக்களை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.
புயலின் ஆட்டம் தொடர்ந்து வருவதால் பாதிப்புகள் குறித்த முழுமையான விவரம் கிடைக்கவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் இது மிகவும் வலுவான புயல் என்று கருதப்படுகிறது.