Cyclone Fani Updates: நேற்று மதியத்தில் இருந்து கொல்கத்தா மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது
Kolkata: நேற்று ஒடிசாவில்(Fani Odisha) கரையை கடந்து கோரத்தாண்டாவம் ஆடிய ஃபனி புயல்(Cyclone Fani), இன்று அதிகாலை மேற்கு வங்கத்தை அடைந்தது. மேற்கு வங்கத்தல் ஃபனி புயல் காரணமாக கனமழை பெய்து வருவதாகவும், பல மரங்களை வேரோடு சாய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய வானிலை மையம் கூறுகையில், ‘மிகத் தீவிர புயலாக உருவெடுத்திருந்த ஃபனி, ஒடிசாவில் கரையை கடந்தபோது வலுவிழந்தது. மீண்டும் மேற்கு வங்கத்தை நோக்கி ஃபனி புயல் நகர்ந்த போது தீவிர புயலாக மாறியது.
ஒடிசாவின் பாலசோரில் இருந்து இன்று அதிகாலை 12:30 மணி அளவில் மேற்கு வங்கத்தில் நுழைந்தது ஃபனி புயல். கராக்பூரில் 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் ஃபனி புயல் கடந்தது. தற்போது ஃபனி புயல் ஹூக்லி மாவட்டத்திற்குப் பக்கத்தில் இருக்கிறது. கொல்கத்தாவில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் ஃபனி புயல் மையம் கொண்டுள்ளது.
ஃபனி புயல்(Fani) மேலும் வடக்கு, வடகிழக்குத் திசைகளில் நகரும். தொடர்ந்து சனிக்கிழமை மதியம் ஃபனி புயல், வங்கதேசத்தை அடையும். வங்கதேசத்தில் நுழையும் போது ஃபனி, புயலாக மாறும்' என்று கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் கடற்கரையை ஒட்டியுள்ள திகா, மந்தமணி, தாஜ்பூர், சண்டேஷ்கலி, கோன்டாய் உள்ளிட்ட இடங்களில் ஃபனி புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கராக்பூர் மற்றும் புர்ட்வான் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
நேற்று மதியத்தில் இருந்து கொல்கத்தா மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. ஃபனி புயலின் மையமானது இன்று காலையிலேயே கொல்கத்தாவை வந்தடையும் என்றும், இன்று முழுவதும் அங்கு மழை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.