This Article is From Nov 14, 2018

15-ம் தேதி பிற்பகல் கரையை கடக்கிறது ‘கஜா’ புயல் : வேகம் 4 கி.மீ.-ஆக குறைந்தது

தமிழகத்தில் கரையைக் கடக்கும் கஜா புயல் குறித்த புதிய தகவல்களை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ளது

15-ம் தேதி பிற்பகல் கரையை கடக்கிறது ‘கஜா’ புயல் : வேகம் 4 கி.மீ.-ஆக குறைந்தது

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல் 15-ம் தேதி அதாவது நாளை மறுதினம் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

கஜா புயலின் நகர்வு வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்துள்ளது. தற்போது சென்னையில் இருந்த 740 கிலோ மீட்டர் தொலைவில் கஜா புயல் உள்ளது. நாகையை பொறுத்தவரை இந்த தூரம் 830 கிலோ மீட்டராக உள்ளது.

வேகம் குறைந்திருப்பதால் நாளை மறுநாள் காலையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் புயல், மதியம் கடந்து செல்ல வாய்ப்புள்ளது. இதன் காரணமாக கடலூர், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும்.

கடலில் அலைகள் சீற்றத்துடன் காணப்படும். சென்னையை பொறுத்தவரை கஜா புயலால் பெரும் பாதிப்பு ஏதும் இருக்காது. தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர், புதுவை, விழுப்புரம் மாவட்டங்களில் அதிகபட்சம் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். சில இடங்களில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசலாம்.

இந்த பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் நவம்பர் 15 வரையில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

.