This Article is From Jun 02, 2020

மும்பையை தாக்க வரும் 'நிசர்கா' புயல்! உச்சகட்ட வேகத்தில் முன்னெச்சரிக்கை பணிகள்

புயல் பாதிப்பு  அதிகமாக இருக்கும் என கருதப்படுவதால் 2 நாட்களுக்கு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே  மாநில  மக்களை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.  

சில நாட்களுக்கு முன்புதான் ஆம்பன் புயல் மேற்கு வங்கம், ஒடிசாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

Mumbai:

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத  அளவுக்கு நிசர்கா என்ற புயல் மும்பையை தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மகாராஷ்டிரா   - குஜராத் இடையே நிசர்கா  புயல கரையை கடக்கும் சமயத்தில், மும்பையில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அப்போது 100 கிலோ மீட்டர் அல்லது அதற்கு அதிகமான வேகத்தில் காற்று வீசக்கூடும். இதையொட்டி முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. இதுதொடர்பான 10 முக்கிய தகவல்களை பார்க்கலாம்....

1. நிசர்கா புயலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிரா மற்றும் குஜராத் முதலமைச்சர்களிடம் பேசியுள்ளார்.  புயல் பாதிப்பை எதிர்கொள்ள தேவையான உதவிகள் செய்து தரப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார். 


2. திங்களன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் நிசர்கா புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து பேசி ஆய்வு மேற்கொண்டார். 


3. நிசர்கா புயல் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.


4. அரபிக்கடலில் உருவான புயல் அடுத்த சில மணி நேரங்களில் வடக்கு நோக்கி நகர்ந்து வடக்கு மகாராஷ்டிரா - தெற்கு குஜராத் இடையே கரையை கடக்கும். 

5. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடற்கரைகளில் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் 30 க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.


6. மும்பை பெருநகர பகுதியில் உள்ள குடிசைவாசிகள், குறிப்பாக தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். புயலால் விழுந்த மரங்கள், நிலச்சரிவுகள் மற்றும் அதிக மழையால் ஏற்படக்கூடிய சேதங்களைச் சமாளிக்க குழுக்கள் தயாராகி வருகின்றன.

7. குஜராத்தின் வல்சாத் மற்றும் நவ்சாரி மாவட்டங்களில் உள்ள 47 கடலோர கிராமங்களைச் சேர்ந்த சுமார் 20,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

8. மீனவர்கள் மற்றும் வர்த்தக கப்பல்கள் துறைமுகத்திற்குத் திரும்புமாறு எச்சரிக்கப்பட்டுள்ளன. 

9. ஏற்கனவே கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிரா, குறிப்பாக  மும்பை நகரம் மிகப்பெரிய துன்பத்தை சந்தித்து வருகிறது.  போதாக்குறையாக தற்போது நிசர்கா புயலும்  தன் பங்குக்கு சேதத்தை ஏற்படுத்த தயாராகி விட்டது.

10. புயல் பாதிப்பு  அதிகமாக இருக்கும் என கருதப்படுவதால் 2 நாட்களுக்கு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே  மாநில  மக்களை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.  

.