This Article is From Jun 03, 2020

மும்பை அலிபாக் அருகே பிற்பகல் கரையை கடக்கிறது நிசர்கா புயல்: முக்கிய தகவல்கள்!

Cyclone Nisarga: நிசர்கா புயல் என்பது இதுவரை எப்போதும் மாநிலம் எதிர்கொண்டிராத அளவிலான கடுமையான புயலாக இருக்கலாம்.

மும்பை அலிபாக் அருகே பிற்பகல் கரையை கடக்கிறது நிசர்கா புயல்: முக்கிய தகவல்கள்!

Mumbai/ New Delhi:

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள நிசர்கா புயல் இன்று காலை தீவிர புயலாக உருவெடுத்துள்ள நிலையில், மகாராஷ்ட்ரா மற்றம் குஜராத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. தொடர்ந்து, இன்று பிற்பகல் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான மும்பைக்கு அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத  அளவுக்கு நிசர்கா புயல் மும்பையை தாக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, மும்பை கடலோர பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இதேபோல், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும், முக்கியமாக பொதுஇடங்களான பூங்கா, கடற்கரை போன்ற பகுதிகளுக்கு யாரும் வரக்கூடாது என்றும் மும்பை காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

இதனிடையே மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மக்கள் அனைவரும் வீட்டிலையே இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். "நிசர்கா புயல் என்பது இதுவரை எப்போதும் மாநிலம் எதிர்கொண்டிராத அளவிலான கடுமையான புயலாக இருக்கலாம்.

அதனால், ஊரடங்கை தளர்த்தும் வகையில், மீண்டும் தொடங்கிய நடவடிக்கைகள் அனைத்தும் அடுத்த இரண்டு நாட்களுக்கு முடக்கப்படும் என்றும், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸால் நாட்டிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில், 70,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நிசர்கா புயலானது மும்பையில் இருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள அலிபாக் அருகே கரையை கடக்கும் என்றும், அந்த சமயத்தில் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும், கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மும்பையில், மக்கள் நடமாட்டத்திற்கு வியாழக்கிழமை நண்பகல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் நேற்றிரவு உத்தரவு பிறப்பித்துள்ளனர். தடையை மீறும் எவரும் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக கொரோனா வைரஸ் நோயாளிகள் உட்பட 10,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நிசர்கா புயலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிரா மற்றும் குஜராத் முதலமைச்சர்களிடம் பேசியுள்ளார்.  புயல் பாதிப்பை எதிர்கொள்ள தேவையான உதவிகள் செய்து தரப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார். முன்னதாக, திங்களன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் நிசர்கா புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து பேசி ஆய்வு மேற்கொண்டார். 

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடற்கரைகளில் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் 30 க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மும்பை பெருநகர பகுதியில் உள்ள குடிசைவாசிகள், குறிப்பாக தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். புயலால் விழுந்த மரங்கள், நிலச்சரிவுகள் மற்றும் அதிக மழையால் ஏற்படக்கூடிய சேதங்களைச் சமாளிக்க குழுக்கள் தயாராகி வருகின்றன.

குஜராத்தின் வல்சாத் மற்றும் நவ்சாரி மாவட்டங்களில் உள்ள 47 கடலோர கிராமங்களைச் சேர்ந்த சுமார் 20,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மீனவர்கள் மற்றும் வர்த்தக கப்பல்கள் துறைமுகத்திற்குத் திரும்புமாறு எச்சரிக்கப்பட்டுள்ளன. 

ஏற்கனவே கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிராவில், குறிப்பாக மும்பை நகரம் மிகப்பெரிய துன்பத்தை சந்தித்து வருகிறது.  போதாக்குறையாக தற்போது நிசர்கா புயலும்  தன் பங்குக்கு சேதத்தை ஏற்படுத்த தயாராகி விட்டது.

10. புயல் பாதிப்பு  அதிகமாக இருக்கும் என கருதப்படுவதால் 2 நாட்களுக்கு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே  மாநில  மக்களை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.  
 

.