Cyclone Nisarga: “இதுவரை மும்பை சந்தித்த புயல்களிலேயே மிக வலுவானதாக நிசர்கா இருக்கலாம்."
ஹைலைட்ஸ்
- இன்று மதியம் கரையைக் கடக்க உள்ளது நிசர்கா புயல்
- மும்பையை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் அதிக பாதிப்பு இருக்கும் எனப்படுகிறது
- மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது
New Delhi: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிசர்கா புயல் இன்று கரையைக் கடக்க உள்ளது என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மும்பைவாசிகளுக்கு முக்கிய வேண்டுகோளை வைத்துள்ளார்.
நாட்டிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிராதான். அங்கு மும்பை நகரத்தில்தான் அதிக கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சூழலில்தான் மும்பையைப் புரட்டிப் போட வருகிறது நிசர்கா. இந்தப் புயலால் பாதிப்புகள் அதிகமாக ஏற்படும் பட்சத்தில் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தை அது மேலும் கடினமாக்கும்.
இது குறித்துப் பேசியுள்ள முதல்வர் உத்தவ் தாக்கரே, “இதுவரை மும்பை சந்தித்த புயல்களிலேயே மிக வலுவானதாக நிசர்கா இருக்கலாம். இன்று மற்றும் நாளை மாநிலத்தின் கடலோர மாவட்டங்களுக்கு நெருக்கடியான காலக்கட்டமாக இருக்கும். ஊரடங்கு உத்தரவுகளில் தளர்வு அளிக்கப்பட்டிருந்தாலும், இந்த இரண்டு நாட்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும். மக்கள் அனைவரும் மிகவும் உஷார் நிலையில் இருக்க வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரும் புயலாக, மும்பைக்கு அருகில் கரையைக் கடக்க உள்ளது நிசர்கா.
“நிசர்கா புயல், அதி தீவிர புயலாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. அது கரையைக் கடக்கும் போது 100 கிலோ மீட்டர் வேகத்துக்கு பலத்தக் காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். இந்த நிலைமை சுமார் 12 மணி நேரத்திற்குத் தொடரலாம்,” என்று தகவல் தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
நிசர்கா புயலில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 10,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளும் அதில் அடங்குவர். மும்பையில் தற்போது 41,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை மட்டுமல்லாமல், புறநகர்ப் பகுதிகளான தானே, பல்கர், ரைகாட் உள்ளிட்டவைகளும் உஷார் நிலையில் இருக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி, நிசர்கா புயல் குறித்து உத்தவ் தாக்கரேவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மும்பை விமான நிலைய நிர்வாகம், தடையில்லா மின்சாரம் கொடுக்க ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், வெள்ள பாதிப்பைத் தடுக்க வாட்டர் பம்புகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தில் 24 மணி நேரமும் உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.