ஆந்திராவின் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
Hyderabad: வங்கக் கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல் ஆந்திராவில் இன்று கரையை கடக்கிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும் சேதத்தை தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது. குறிப்பாக கடலோரம் அமைந்திருக்கும் 9 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புயல் வீசிச் சென்றதும் மின் கம்பங்கள் அதிக பாதிப்பு அடையும். இதனை உணர்ந்துள்ள ஆந்திர அரசு, புயலுக்குப் பின்னர் மின்சாரம் மக்களுக்கு உடனடியாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று பொதுமக்களுக்கு குடிநீர், உணவு உள்ளிட்டவற்றை அதிகாரிகள் சரியான நேரத்தில் அளிக்க வேண்டும் என்றும் ஆந்திர அரசு ஆணையிட்டுள்ளது.
விவசாயிகள் தங்களது பயிர்களை முன்கூட்டியே பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார். புயல் பாதிப்பு தொடர்பாக மொபைல் ஆப் ஒன்றையும் ஆந்திர அரசு ஏற்படுத்தியுள்ளளது.
விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியின் ஏனாம் மாவட்டத்திலும் உள்ள தாழ்வான பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இங்கு தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
ஆந்திராவின் காக்கிநாடா மற்றும் மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஒடிசாவை பொறுத்தவரயில், ராயகடா, கோரபுட், மல்கங்கிரி, நபரங்கபூர், கல்ஹாந்தி, கந்தாமால், நுவாப்படா, பரகார், பலங்கிர், ஜர்சுகுடா, சம்பல்பூர், கஜபதி, கஞ்சம் ஆகிய இடங்களில் பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.