This Article is From Oct 11, 2018

ஒடிசா கடற்கரையைக் கடக்கும் ‘டிட்லி’ புயல்… அலெர்ட்டில் அரசு!

Titli Cyclone Updates: புயல் ஒடிசா கடற்கரையை கடக்கத் தொடங்கியுள்ள நிலையில், கஞ்சம், கஜபதி, புரி, குர்தா மற்றும் ஜகத்சிங்பூர் ஆகிய மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருகிறது. 

Cyclone Titli in Odisha: கோபால்பூர் மற்றும் பெராம்பூரில் பல வீடுகளும் புயலால் சேதம் அடைந்துள்ளதாக தகவல் தெரவிக்கப்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்

  • டிட்லி என்பதற்கு இந்தியில் பட்டாம்பூச்சி என்று பொருள்
  • டிட்லி காரணமாக ஒடிசா மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன
  • தேசிய பேரிடர் மீட்புப் படையினர், பல இடங்களில் முகாமிட்டுள்ளனர்
New Delhi:

ஒடிசா மாநில, கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கோபால்பூரில் ‘டிட்லி’ புயல் (Cyclone Titli) கரையைக் கடக்க ஆரம்பித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை டிட்லி புயல் கரையைக் கடக்க ஆரம்பித்துள்ள நிலையில், ஒரு மணி நேரத்துக்கு 126 கிலோ மீட்டர் வேகத்தில் அங்கு புயல் காற்று வீசியுள்ளது. 

புயல் வீரியமாக இருக்கும் காரணத்தால், பல இடங்களில் மரங்கள் வேறோடு சாய்துள்ளன எனவும், மின் கம்பங்கள் காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் விழுந்துள்ளன எனவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கோபால்பூர் மற்றும் பெராம்பூரில் பல வீடுகளும் புயலால் சேதம் அடைந்துள்ளதாக தகவல் தெரவிக்கப்பட்டுள்ளது. 

புயலின் வீரியம் அதிகமாக இருக்கும் என்று கணித்திருந்த ஒடிசா மாநில அரசு, கடலோர மாவட்டங்களில் இருந்த 3,00,000 பேரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளது. அதேபோல பல மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அரசு விடுமுறை அளித்துள்ளது. 

புயல் ஒடிசா கடற்கரையை கடக்கத் தொடங்கியுள்ள நிலையில், கஞ்சம், கஜபதி, புரி, குர்தா மற்றும் ஜகத்சிங்பூர் ஆகிய மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருகிறது. 

கன மழை பெய்ய ஆரம்பித்துள்ள நிலையில், கஞ்சம், கஜபதி, புரி, குர்தா மற்றும் ஜகத்சிங்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்களுக்கு, தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் அதைச் சமாளிக்க ஒடிசா அரசு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒடிசா மாநில மீட்புப் படையினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் வெள்ளம் வர வாய்ப்புள்ள இடங்களில் முகாமிட்டுள்ளனர். இதுவரை ராணுவத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றாலும், மழை அளவைப் பொறுத்து ராணுவத்தினர் வரவழைக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அதேபோல விமானப் படை மற்றும் கடற்படைக்கும் நிலைமை குறித்து தெரியபடுத்தியுள்ளதாக ஒடிசா அரசு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். 

.