வரும் ஜூன் 15 ஆம் தேதி வரை குஜராத் கடற்கரையொட்டி மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது வானிலை மையம்.
New Delhi: அரபிக் கடலில் உருவாகியுள்ள ‘வாயு' புயுல், குஜராத்தில் நாளை கரையைக் கடக்க உள்ளது. இதனால், அம்மாநிலத்தின் கடற்கரையோரம் உள்ள 3 லட்சம் பேர் பத்திரமான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கட்ச் பகுதி முதல் தெற்கு குஜராத் வரை உள்ள கடற்கரையை ஒட்டியுள்ள இடங்கள் ‘ஹை அலெர்ட்டில்' வைக்கப்பட்டுள்ளன. கடற்கரையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாயு புயலுக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
10 ஃபேக்ட்ஸ்:
1.குஜராத்தில் போர்பந்தர் மற்றும் மாகுவா பகுதியில் ‘வாயு' புயல் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டியூ பகுதியில் இருக்கும் வேராவலிலும் இந்தப் புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனப்படுகிறது.
2.இது குறித்து வானிலை மையம், “கூறை வீடுகள் மற்றும் ஸ்திரத்தன்மை குறைவாக உள்ள அமைப்புகள் இந்தப் புயலினால் கடுமையாக பாதிக்கப்படும். சாலை மற்றும் விவசாயப் பயிர்களுக்கும் இந்தப் புயலினால் பாதிப்பு இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.
3.தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் இந்திய விமானப்படை விமானம் ஒன்று ஜாம்நகரில் இன்று காலை தரையிறங்கியது. ராணுவம், கடற்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் என அனைவரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
4.குஜராம் மற்றும் டியூவில் இருக்கும் 3 லட்சம் பேரை பத்திரமான இடத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் 700 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்படுவார்கள்.
5.அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ள வாயு, பலத்த காற்றைக் கொண்டு வருவதுடன் கனமழையையும் பொழியும் என்று கூறப்பட்டுள்ளது.
6.வரும் ஜூன் 15 ஆம் தேதி வரை குஜராத் கடற்கரையொட்டி மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது வானிலை மையம்.
7.குஜராத் மாநில முதல்வர் விஜய் ருபானி, தவார்கா, சோம்நாத், சாசன் மற்றும் கட்ச் பகுதிகளில் இருக்கும் சுற்றுலா பயணிகளை பத்திரமான இடத்துக்கு செல்லும்படி வலியுறுத்தியுள்ளார்.
8.”வாயு புயல் குஜராத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. குஜராத்தில் இருக்கும் காங்கிரஸினர் அனைவரும் புயலால் பாதிக்கப்படும் இடங்களில் சேவையாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்.” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட்டியுள்ளார்.
9.வாயு புயலால் அடுத்த இரண்டு நாட்களுக்கு கோவா மற்றும் கோங்கன் பகுதிகளில் கனமழை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10.புயலால் பாதிக்கப்பட உள்ள பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகளை வெளியேற்ற குஜராத் மாநில அரசு சார்பில் போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.