This Article is From Oct 16, 2019

Ayodhya Case: இன்று மாலை 5 மணிக்குள் விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

Ayodhya case: சுமார் 28 ஆண்டுகளாக நடந்து வரும் பாபர் மசூதி - அயோத்தி வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கின் தினசரி விசாரணை இன்றுடன் முடிவுக்கு வரும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

Ayodhya case: அயோத்தி வழக்கின் தீர்ப்பை இந்தியாவே எதிர்பார்த்துள்ளது.

New Delhi:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் இன்று மாலை 5 மணிக்குள் அனைத்து வாதங்களையும் முடிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த இடம் ராமர் பிறந்த இடம் என்று ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட வலதுசாரி அமைப்பினர் நம்பி வருகின்றனர். இந்த இடத்தில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது. 

மொத்தம் 2.77 ஏக்கர் நிலத்திற்குத்தான் சுமார் 28 ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. இந்த வழக்கை முதலில் விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் தனது தீர்ப்பை வழங்கியது. இதன்படி, வழக்குத் தொடர்ந்த வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகள் நிலத்தை சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. 

இதனை ஏற்க மறுத்து உச்ச நீதிமன்றத்தில் 14 பேர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. பிரச்சையை சமரசம் மூலம் தீர்த்து வைக்க உச்ச நீதிமன்றம் முயற்சி மேற்கொண்டது. இருப்பினும் இந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இதையடுத்து தினசரி வாக்கு விசாரணையாக கடந்த ஆகஸ்ட் 6-ம்தேதி முதல் அயோத்தி வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. 

இதுவரை 39 நாட்கள் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், இன்றுடன் வாதங்களை முடித்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்துக்கள் தரப்பிற்கு 45 நிமிடங்களும், முஸ்லீம் தரப்பிற்கு ஒரு மணி நேரமும் இன்று ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நேற்றைய வழக்கு விசாரணையின் போது, ராம் லல்லா அமைப்பு சார்பாக மூத்த வழக்கறிஞர் கே.பராசரன் வாதிட்டார். அவர் வாதிடுகையில், 'முஸ்லிம்கள் எந்த மசூதியில் வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். ஆனால் இந்துக்களால் ராமர் பிறந்த இடத்தை மாற்றிக் கொள்ள முடியாது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது என்பது ஒரு வரலாற்றுப் பிழை. அதனை சரி செய்ய வேண்டும்.' என்றார். 

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வரும் நவம்பர் 17ம் தேதி ஓய்வு பெறுவதால் அதற்கு முன்பாக உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

.