மேற்காசியா, மாலத்தீவுகளில் இருந்து இந்தியா வர விரும்புவோரை அழைத்து வருவதற்கு கப்பல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஹைலைட்ஸ்
- கொரோனா பாதிப்பால் வெளிநாட்டிலிருந்து ஏராளமானோர் இந்தியா திரும்பவுள்ளனர்
- அவர்களை பரிசோதனையிட்டு அழைத்து வர கேரள முதல்வர் கோரிக்கை
- முதல்வர் நரேந்திர மோடிக்கு பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்
Thiruvananthapuram: கொரோனா பாதிப்பால் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அவர்களை சோதினை செய்யாமல் அழைத்து வருவது ஆபத்தில் முடியும் என பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களை சந்தித்து மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவரித்தார். செய்தியாளர் சந்திப்பில் கேரள முதல்வர் கூறியதாவது-
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை நாட்டுக்கு திருப்பி அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது. அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா இல்லையா என்பதை சோதித்து அறிந்துதான் அழைத்து வர வேண்டும். இல்லாவிட்டால் நாட்டில் பேராபத்து ஏற்பட்டு விடும்.
விமானத்தில் 200 பேர் இருப்பார்கள். அதில் ஒருவர் அல்லது இருவருக்கு கொரோனா இருந்தால் எல்லோருக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவர்கள் இந்தியாவுக்கு வரும்போது இங்கும் கொரோனா பரவக்கூடும்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். விமானத்தில் ஒருவர் ஏற்றப்படும் முன்பாக அவருக்கு கொரோனா பாதிப்பு சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் வசிக்கும் சுமார் 1.90 லட்சம் இந்தியர்கள் இந்தியா திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவோருக்கு ரூ. 50 ஆயிரமும், அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு ரூ. 1 லட்சமும் விமானக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
இதேபோன்று மேற்காசியா, மாலத்தீவுகளில் இருந்து இந்தியா வர விரும்புவோரை அழைத்து வருவதற்கு கப்பல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முன்பு வளைகுடா போர் நடைபெற்றபோது கப்பல் மூலமாகத்தான் 1.70 லட்சம் இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.
தற்போது இந்தியா அழைத்து வரப்படுவோர் 7 நாட்கள் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். 7-வது நாள் அவர்களிடம் கொரோனா சோதனை நடத்தப்படும். இதில் நெகடிவாக இருந்தால் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் தனிமைப்படுத்தும் முகாம்களில் சிகிச்சை அளிக்கப்படும்.