Darbar Sasikala Row: "வெற்றிடம் இருக்கிறது என்று ரஜினி சொன்னது தவறு என்று அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்"
Darbar Sasikala Row: ரஜினிகாந்த் (Rajinikanth) நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தர்பார்' (Darbar) திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிரான சில காட்சிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதை வரவேற்றுப் பேசினார் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். அதே விவகாரம் பற்றி தமிழக கூட்டறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, சூசகமாக பேசி சமாளித்துள்ளார்.
முன்னதாக ஜெயக்குமார், “பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் இந்த சமூகத்தில் செய்து விடலாம் என்று நினைப்பவர்களுக்கும் தர்பார் படக் காட்சி ஒரு பாடமாக இருக்கும். அதைப் போன்ற கருத்துகளை வரவேற்கிறோம். சமூகத்திற்கு நல்ல கருத்தைச் சொல்லும் திரைப்படங்களை நாங்கள் எப்போதும் வரவேற்போம்,” என்று கூறி அதிர்ச்சி கொடுத்தார்.
“சசிகலா விவகாரம் இருக்கட்டும். அது பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. ரஜினிகாந்த், தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆனால், ஒரு மிகப் பெரிய வானொலி நிறுவனம் தமிழக அளவில் சுமார் 1 கோடி பேரிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குதான் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிம் மிகவும் அதிக ஆளுமைத் திறன் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பட்டியலில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் பெயர் கூட வந்திருக்கிறது. ஆக மொத்தம் தமிழகத்தில் அரசியல் ஆளுமை திறன் இல்லை, வெற்றிடம் இருக்கிறது என்று ரஜினி சொன்னது தவறு என்று அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்,” எனப் பேசியுள்ளார் செல்லூர் ராஜூ.
சமீபத்தில், அமமுகவின் முக்கிய நிர்வாகியாக இருந்த புகழேந்தி, மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது கர்நாடக மாநில அதிமுகவின் செயலாளராக இருந்தவர் புகழேந்தி. சசிகலாவுக்கு நெருக்கமான இவர், டிடிவி தினகரன் பக்கம் சாய்ந்து, அமமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்தார். தற்போது அவர் மீண்டும் அதிமுகவுக்கு வந்தாலும், தொடர்ந்து சசிகலாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார் என்றுதான் சொல்லப்படுகிறது. இப்படி அதிமுகவிலேயே பலரும் சசிகலாவுக்கு நெருக்கமாக இருந்து வரும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்ற ஆண்டு சசிகலா, கர்நாடகாவில் அடைக்கப்பட்டிருக்கும் பரப்பன அக்ரஹார சிறையில் வண்ண உடை போட்டு, ஹாயாக வாக்கிங் போன வீடியோ காட்சிகள் வெளியாகி பகீர் கிளப்பின. பல வசதிகளுடன் சசிகலா சொகுசாக சிறையில் காலத்தைக் கடத்தி வருகிறார் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இது குறித்து தற்போதும் விசாரணை நடந்து வருகிறது.