This Article is From Sep 29, 2018

5 கோடி பயனர்களின் தரவுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன… மீண்டும் சிக்கலில் ஃபேஸ்புக்!

ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் 5 கோடி பயனர்களின் கணக்குகளின் தரவுகளை, அடையாளம் தெரியாத ஹேக்கர்கள் திருடியுள்ளனர் என்று மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்

5 கோடி பயனர்களின் தரவுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன… மீண்டும் சிக்கலில் ஃபேஸ்புக்!

நாடு வாரியாக பாதிக்கப்பட்ட கணக்குகள் குறித்தான தகவலை மார்க் கூறவில்லை

ஹைலைட்ஸ்

  • இந்த ஹேக் மூலம் 5 கோடி கணக்குகள் பாதிக்கப்பட்டுள்ளன
  • இந்தியாவில் 27 கோடி பேர் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர்
  • உலக அளவில் 200 கோடி பேர் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர்
Washington:

ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் 5 கோடி பயனர்களின் கணக்குகளின் தரவுகளை, அடையாளம் தெரியாத ஹேக்கர்கள் திருடியுள்ளனர் என்று அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். தரவுகள் திருடப்பட்டக் கணக்குகளில் பெரும் பகுதி இந்தயாவைச் சேர்ந்ததாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. 

இந்த விவகாரம் குறித்து சக்கர்பெர்க், ‘அடையாளம் தெரியாத ஹேக்கர்கள் 5 கோடி ஃபேஸ்புக் பயனர்களின் கணக்குகளின் தனிப்பட்டத் தகவல்களை பார்க்கும் வகையில் ஹேக் செய்துள்ளதை கண்டுபிடித்துள்ளோம். மேலும் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்த போது, அது கூடுதலாக 4 கோடி பயனர்களின் கணக்குகளையும் பாதித்தது. இதனால், பாதிக்கப்பட்ட 9 கோடி கணக்குகளும் லாக்-அவுட் செய்யப்படும். அவர்கள் மீண்டும் லாக்-இன் செய்து தான் ஃபேஸ்புக்கை பயன்படுத்த முடியும். பாதிக்கப்பட்டவர்கள் கணக்குகளுக்கு, எங்கள் நிறுவனம் தனிப்பட்ட முறையில் பிரச்னை குறித்து தகவல் அனுப்பும்’ என்று கூறியவர்,

தொடர்ந்து, ‘இந்த ஹேக் குறித்து எங்கள் நிறுவனம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. பயனர்களின் தரவுகளை திருட முடியாத அளவுக்கு ஃபேஸ்புக் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது’ என்று விளக்கியுள்ளார்.

இந்தியாவில் மொத்தம் 27 கோடி பேர் ஃபேஸ்புக் வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் ஃபேஸ்புக்கிற்கு 200 கோடி பயனர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், தற்போது நடந்துள்ள ஹேக்கிங்கில், இந்தியாவைச் சேர்ந்த நிறைய கணக்குகள் பாதிக்கப்பட்டிருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இது குறித்து சக்கர்பெர்கிடம் கேட்டபோது, அவர் நாடு வாரியாக ஹேக் செய்யப்பட்ட கணக்குகள் குறித்து விவரம் இல்லை என்று மட்டும் கூறியுள்ளார். 

.