New Delhi: 2008 மும்பை தீவிரவாத தாக்குதலில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ள டேவிட் ஹீட்லி அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது சக கைதிகள் சரமாரியாக தாக்கியதாகவும், அதனால் அவர் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 160 பேர் கொல்லப்பட்டனர். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பல தீவிரவாதிகள் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் தான் அமெரிக்க வாழ் பாகிஸ்தானியரான டேவிட் ஹீட்லி. மும்பை தாக்குதல் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. விசாரணை முடிவில் ஹீட்லி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. அவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது அமெரிக்க நீதிமன்றம்.
இந்நிலையில் அவர் கடந்த 8 ஆம் தேதி, சிறையில் இருக்கும் சக கைதிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர் நார்த் எவான்ஸ்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், அதிகாரபூர்வமாக இதுவரை எந்தத் தகவலும் இந்த சம்பவம் தொடர்பாக வெளியிடப்படவில்லை.