This Article is From Feb 11, 2020

“ரஜினிக்கு ரிலீஃபு… விஜய்க்கு வேட்டு… இதுதான் உங்க பட்ஜெட்டு”- நாடாளுமன்றத்தில் சீறிய தயாநிதி!

“நாட்டின் நிதி அமைச்சர் என்பவர், செலவைக் குறைத்து லாபத்தை ஈட்ட வழிவகை செய்ய வேண்டும். ஆனால், தேவையில்லாத செலவுகளுக்குத் தொடர்ந்து நிதி ஒதுக்குகிறது இந்தி நிதி அமைச்சகமும் அரசும்."

“ரஜினிக்கு ரிலீஃபு… விஜய்க்கு வேட்டு… இதுதான் உங்க பட்ஜெட்டு”- நாடாளுமன்றத்தில் சீறிய தயாநிதி!

“தமிழகத்தில் சமீபத்தில் உங்கள் அரசின் கொள்கைகளால் பயனடைந்த ஒரு சம்பவம் நடந்தது"

மத்திய பட்ஜெட் 2020 சில நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் குறித்தான விவாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடந்து வருகிறது. விவாதத்தின் போது எதிர்க்கட்சி எம்பிக்கள், மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள் பற்றி தங்களது கருத்துகளையும் சந்தேகங்களையும் எழுப்பி வருகின்றனர். அப்படி திமுக எம்பி தயாநிதி மாறன் எழுப்பியுள்ள சில கேள்விகள், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் விஜய்யைப் பற்றி விவாதிக்கும் அளவுக்கு சென்றுள்ளது. 

தனது பட்ஜெட் குறித்தான விமர்சன உரையை ஆரம்பித்த தயாநிதி, “வரலாற்றிலேயே மிக நீண்ட பட்ஜெட் உரையில் இருப்பது அத்தனையும் பொய், பொய், பொய் மட்டும்தான். உங்கள் பட்ஜெட்டின் யோக்கியதை என்னவென்பதை நான் ஒரு சிறிய உதாரணம் மூலம் சொல்கிறேன்.

முன்னர் ஒரு மசாலா தோசை 50 ரூபாய்க்கு விற்கும். தற்போது அது 45 ரூபாய்க்கு விற்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், தொட்டுக்கொள்ள சாம்பார் வேண்டும் என்றால் அதற்குத் தனியாக 15 ரூபாய் கொடுக்க வேண்டும். கூடவே சட்னி வேண்டுமென்றால் அதற்குத் தனியாக 15 ரூபாய் கொடுக்க வேண்டும். இப்படி 50 ரூபாய் இருந்த மசாலா தோசை, தற்போது 80 ரூபாய்க்கு விற்கிறது. அப்படிப்பட்ட வரிமுறையை நீங்கள் அமல் செய்துள்ளீர்கள்,” என்று பேச அவையிலிருந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் சிரித்தனர். 

தொடர்ந்து அவர் இந்தியர்களின் சேமிப்பை மத்திய அரசு சீர்குலைத்து வருகிறது என்று பேசத் தொடங்கினார், “சேமிப்பு என்பது இந்தியர்களின் ரத்தத்தில் ஊறிப்போனது. நாம் என்ன சம்பாதித்தாலும் அதில் சிறிய அளவு தொகையை சேமிக்க வேண்டும் என்று நம் கலாசாரத்தில் சொல்லப்படுகிறது. ஆனால், நீங்கள் சேமிப்பு வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தைத் தொடர்ந்து குறைத்து வருகிறீர்கள். மக்களை, சேமிக்காதீர்கள்… செலவு செய்யுங்கள் என்று சொல்கிறீர்கள். இதன் ஒரு பகுதியாகத்தான் பிஎஸ்என்எல், பிபிஎல், ஏர் இந்தியா நிறுவனம், எல்ஐசி என எல்லாவற்றையும் கைகழுவப் பார்க்கிறது அரசாங்கம். இப்போது கரோனா நோய் தொற்று வந்து, சீனாவில் சிக்கிய இந்தியர்களை காப்பாற்றி அழைத்து வந்தது ஏர் இந்தியா நிறுவன சேவைதான். நீங்கள் ஏர் இந்தியாவை விற்றுவிட்டால் யார் நெருக்கடி சமயத்தில் உதவிக்கு வருவார்கள். பொதுத் துறை நிறுவனங்களை விற்று விட்டால், பிரச்னை வந்தால் எப்படி சமாளிப்போம்,” எனக் கேள்வி எழுப்பினார்.

“நாட்டின் நிதி அமைச்சர் என்பவர், செலவைக் குறைத்து லாபத்தை ஈட்ட வழிவகை செய்ய வேண்டும். ஆனால், தேவையில்லாத செலவுகளுக்குத் தொடர்ந்து நிதி ஒதுக்குகிறது இந்தி நிதி அமைச்சகமும் அரசும். நீங்கள் எப்படி உங்களை நிதி அமைச்சர் என்று சொல்லிக் கொள்வீர்கள் நிர்மலா சீதாராமன். தமிழ் பற்றியும் திருக்குறள் பற்றியும் வாய் கிழிய பேசும் இந்த அரசு தமிழுக்காக என்ன செய்தது. ஆனால் இறந்துபோன மொழியான சமஸ்கிருதத்திற்குக் கோடி கோடியாக நிதி ஒதுக்கப்படுகிறது. சங்கப் பெருமை கொண்ட தொண்மையான செம்மொழி தமிழுக்கு எந்த நிதியும் ஒதுக்கி வளர்ப்பது கிடையாது” என்று தயாநிதி காட்டமாக உரையாற்ற அவையில் சலசலப்பு ஏற்பட்டது. 

இறுதியாக அவர், “தமிழகத்தில் சமீபத்தில் உங்கள் அரசின் கொள்கைகளால் பயனடைந்த ஒரு சம்பவம் நடந்தது. நீங்கள் எடுத்த நடவடிக்கைகளால் நடிகர் ரஜினிகாந்த் செலுத்த வேண்டிய 1 கோடி ரூபாய் வரிக்கு, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓராண்டில் தமிழகத்தில் தேர்தல் வரவுள்ளது. அதற்கு நீங்கள் ரஜினியைப் பயன்படுத்துகிறீர்கள். 

ஆனால் நடிகர் விஜய்யை, அவரின் படப்பிடிப்புத் தளத்திலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்து வந்து விசாரணை மேற்கொள்கிறீர்கள். இதனால் தயாரிப்பாளர் தரப்பில் ஏற்பட்ட பெருத்த நஷ்டம் பற்றியெல்லாம் உங்களுக்குக் கவலை இல்லை. இதுதான் உங்கள் அரசியல்,” என்று சாடி, தனது உரையை முடித்தார். 

.