'திறந்த மனம் கொண்டு இந்த மசோதாவை மாற்றுங்கள். முன் முடிவுகள் கொண்டு, முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வு கொண்டு சட்டத்தை இயற்றாதீர்கள்'
Citizenship Bill debate - சுமார்12 மணி நேர விவாதங்களுக்குப் பிறகு குடியுரிமை திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று முன்தினம் ஒப்புதல் பெற்றது. இந்நிலையில் இன்று மசோதா, ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மக்களவையான லோக்சபாவில் தமிழக எம்பிக்களில் தயாநிதி மாறன் (Dayanithi Maran), திருமாவளவன், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் மசோதாவுக்கு எதிராக கொந்தளித்துப் பேசினர். இதில் தயாநிதி, அமித்ஷாவுக்குப் (Amit Shah) பல்வேறு கேள்விகளை அடுக்காக முன்வைத்தார். பல இடங்களில் மத்திய அரசுக்கு அறிவுரை வழங்கினார். தயாநிதியின் பேச்சு இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளது.
“திமுக சார்பாக இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறோம். காரணம், இது முழு மனதோடு வரையறுக்கப்படவில்லை. இது முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது. உண்மையில் இந்த மசோதாவில் கிறித்துவர்களையும் இணைத்திருக்க மாட்டீர்கள். ஆனால், வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு வரும் என்பதை உணர்ந்து அவர்களை இணைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்,” என்று ஆரம்பித்தார் தயாநிதி.
தொடர்ந்து அமித்ஷாவைப் பார்த்து பேசிய தயாநிதி, “நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவன். தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். எங்கள் மாநிலத்தில் உங்கள் சார்பில் ஒரு மக்கள் பிரதிநிதி கூட இல்லை. சொல்லப் போனால் மொத்த தென்னிந்தியாவிலும் பாஜகவின் தாக்கம் குறைவு. இதை வைத்துப் பார்க்கும்போது, வட இந்தியாவும் தென்னிந்தியாவும் வித்தியாசமாக இருக்கிறது என்பதை உணர்வீர்கள். எனவே, நாங்கள் சொல்கிறோம் இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது என்று. சிறுபான்மையினருக்கு எதிரானது என்று…
நீங்கள் இந்தியாவின் ஒரு பகுதிக்கு மட்டும் உள்துறை அமைச்சர் அல்ல. மொத்த நாட்டிற்கும் உள்துறை அமைச்சர். எனவே, எங்கள் குரல்களையும் காது கொடுத்துக் கேளுங்கள். நாட்டில் இருக்கும் சிறுபான்மையினர் மத்தியில் அச்சம் காணப்படுகிறது. அவர்களின் வாழ்வாதாரம், அவர்களின் வாழ்க்கை என்னவாகும் என்கின்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இந்த மசோதாவால் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று உங்கள் அரசு சொல்கிறது. நீங்கள் சொல்கிறீர்கள். இது சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது.
உங்களுக்கு இந்த அவையில் அறுதிப் பெரும்பான்மை இருக்கிறது. உங்களிடம் யானை பலம் உள்ளது. இந்த நாட்டு மக்கள் உங்களுக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார்கள். இவ்வளவு பெரிய பலம் இருக்கும்போது, ஆணவம் இருக்கக் கூடாது. அடக்கம் இருக்க வேண்டும்.
யாதும் ஊரே; யாவரும் கேளீர் என்பதை உணர்ந்த மரபில் இருந்து வந்தவன் நான். நாட்டின் பிரதமரான நரேந்திர மோடியும், தமிழர்களின் மனதில் இடம் பிடிக்க, இதையே ஐ.நா சபையில் முழங்கினார். நாங்கள் உலகில் இருக்கும் அனைவரையும் சகோதரத்துவத்துடன் பார்க்கிறோம். எனவே, திறந்த மனம் கொண்டு இந்த மசோதாவை மாற்றுங்கள். முன் முடிவுகள் கொண்டு, முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வு கொண்டு சட்டத்தை இயற்றாதீர்கள்,” என்று நெத்தியடியாக பேச்சை முடித்தார்.
தயாநிதியின் பேச்சின் போது, பல இடங்களில் பாஜக தரப்பினர் கூச்சல் எழுப்பினர். அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் பலர் பதிலுக்கு சத்தம் போட்டனர். கிட்டத்தட்ட 12 நிமிடங்கள் தயாநிதியின் பேச்சு தொடர்ந்தது. இறுதியில் அவையில் இருக்கும் எம்பிக்களின் கரகோஷத்துடன் அவரது உரை நிறைவுபெற்றது.