நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்படுவதாக பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
New Delhi: அமுல், மதர் டெய்ரி போன்ற பால் நிறுவனங்கள் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தியுள்ள நிலையில் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் விலையை குறைத்துள்ளது. இதன் மூலம் வட மாநிலங்களில் அமுல், மதர் டெய்ரிக்கு பதஞ்சலி கடும் போட்டியை கொடுக்கத் தொடங்கியுள்ளது.
டெல்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அமுல் மற்றும் மதர் டெய்ரி பால் நிறுவனங்கள் பிரபலமாக விளங்குகின்றனர். இந்த நிறுவனத்திடமிருந்து வாங்கப்படும் பால் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
சமீபத்தில் அமுலும், மதர் டெய்ரியும் பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தின. இதன்படி பால் விலை லிட்டருக்கு ரூ. 44-க்கு விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ஒரு லிட்டர் பாலை ரூ. 40-க்கு வழங்கத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து ராம்தேவ் கூறுகையில், 'தற்போது வரையில் தினமும் 4 லட்சம் லிட்டர் பாலை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது இலக்கு. நாங்கள் பாலை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கிறோம். இதற்கான தொகை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது' என்றார்.