தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவின் சேவைகளை ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பாராட்டியுள்ளார்.
New Delhi: மத்திய அரசின் ஒளிபரப்பு சேனலான தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ ஆகியவை புதுப்பிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காக ரூ. 1,000 கோடி செலவிலான திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பு ஏற்றுள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் மீண்டும் பதவி வகித்து வருகிறார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஜவடேகர், தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், சிறப்பான சேவையை அவை வழங்கி வருவதாகவும் கூறினார்.
தூர்தர்ஷனின் சேவை மேம்பாட்டுக்காக 17 கேமரா ஒளிபரப்பு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் அதிக தரம் கொண்ட வீடியோ ஒளிபரப்பை பெற முடியும்.
தகவல் ஒளிபரப்பு செயலர் அமித் காரே கூறுகையில், 'தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோவின் மேம்பாட்டுக்காக 3 ஆண்டு திட்டம் போடப்பட்டுள்ளது. ரூ. 1,054 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.
நாட்டில் பல சேனல்கள் தகவல்களை உடனுக்குடன் தருவதாக கூறி வருகின்றன. ஆனால் மக்களின் நம்பிக்கையை தூர்தர்ஷன்தான் பெற்றுள்ளது. இந்தியாவில் அதிக பார்வையாளர்களை கொண்ட டிவியாக தூர்தர்ஷனும், ரேடியோவாக ஆல் இந்தியா ரேடியாவும் உள்ளன'என்றார்.