இந்த கடிதத்தில் பாலிவுட் திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப், தமிழ்த் திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோரும் கையெழுத்திட்டுள்ளனர்.
ஹைலைட்ஸ்
- கும்பல் வன்முறை குறித்து கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
- சமீபத்தில் நடந்த கும்பல்வன்முறைகள் பற்றி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- 'கும்பல் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'
New Delhi/Kolkata: இந்தியாவைச் சேர்ந்த 49 பிரபலங்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். திரைப்பட இயக்குநர் அபர்னா சென், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்டோரும் அதில் அடங்குவர்.
“டியர் பிரைம் மினிஸ்டர்… முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் பிற சிறுபான்மையினர்களை அடித்துக் கொல்லும் சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியட்ட தகவல்படி, 2016 ஆம் ஆண்டு மட்டும் இதைப் போன்ற 840 சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், அவை குறித்து சரிவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவங்கள் குறித்து நீங்கள் நாடாளுமன்றத்தில் கண்டனத்தைப் பதிவு செய்தீர்கள். ஆனால், அது மட்டும் போதாது. கும்பல் வன்முறையில் ஈடுபடுபவர்கள் பிணையில் வெளி வர முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக ‘ஜெய் ஸ்ரீ ராம்' என்கிற கோஷம் தான் பல வன்முறைகளுக்குத் தூண்டுகோளாக இருந்து வருகிறது. மதத்தின் பெயரால் இத்தனை வன்முறைகள் நடப்பது வருத்தமளிக்கிறது. ராம் என்கிற பெயர், இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை சமூகத்தினருக்கு மிகவும் புனிதமானது. அப்படியிருக்க, அந்த பெயர் வன்முறைக்காக பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அதற்கு நீங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆளுங்கட்சியை விமர்சிப்பது என்பது தேசத்தை விமர்சிப்பதாகாது. ஆளுங்கட்சியும் ஒரு அரசியல் கட்சி என்கிற புரிதல் வேண்டும். எனவே, அரசுக்கு எதிராக தெரிவிக்கப்படும் கருத்து, தேசத்துக்கு எதிராக தெரிவிக்கப்படும் கருத்தாக பார்க்கக் கூடாது. எதிர் வாதங்களையும் கேட்கும் சூழல் இருக்க வேண்டும். அதுவே இன்னும் வலுவான தேசத்தை கட்டியமைக்க உதவும்.
எங்களின் கோரிக்கைகள் சரியான முறையில் பரிசீலிக்கப்படும் என்று நம்புகிறோம். இந்தியர்களாக இந்நாட்டின் எதிர்காலம் குறித்து நாங்களும் கவலைப்படுகிறோம்” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கடிதத்தில் பாலிவுட் திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப், தமிழ்த் திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோரும் கையெழுத்திட்டுள்ளனர்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, கும்பல் வன்முறையில் ஈடுபடுபவர்களை நாடாளுமன்றத்தில் விமர்சித்தார். ஜார்கண்டில் 24 வயது வாலிபர், அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, ஜூன் மாதம் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, “ஜார்கண்டிலோ, மேற்கு வங்கத்திலோ, கேரளத்திலோ எங்கு வன்முறை நடந்தாலும், அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வன்முறையில் ஈடுபடவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பாடம் புகட்ட வேண்டும்” என்று பேசினார்.