ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் தலைவருமான ஜெ.தீபா, அதிமுக-வுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், ‘நான் அதிமுக-வுடன் இணைந்து அரசியல் தொண்டாற்ற விருப்பப்படுகிறேன். இதற்கு எனது கட்சிக்காரர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த இணைப்பு குறித்து முதலில் அதிமுக-தான் பேசத் தொடங்கியது. அதைத் தொடர்ந்துதான் கட்சி பொதுக் கூட்டத்தில் இணைவது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக-வின் ஒரு அங்கம்தான் நாங்கள். அதில் எந்தவித சந்தேகங்களும் வேண்டாம். அது குறித்து நான் அரசியல் பயணத்தை ஆரம்பித்த நாள் முதலே தெளிவாகத்தான் இருக்கிறேன்' என்று கூறினார்.
தீபாவின் கருத்து குறித்து துணை முதல்வரும் அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது, ‘தீபா, அதிமுக-வுடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என்று சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது' என்று கூறினார். இதனால், கூடிய சீக்கிரம் அவர் அதிகாரப்பூர்வமாக அதிமுக-வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற ஆண்டு, ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாளன்று தீபா, ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை'-யை அவர் ஆரம்பித்தார்.