முகேஷ்(Anil Ambani) மற்றும் அனில் அம்பானி(Mukesh Ambani) இடையிலான உறவு எப்போதும் இந்த அளவு வலுவானதாக இருந்தது இல்லை.
ஹைலைட்ஸ்
- எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை ரிலையன்ஸ் செலுத்தியது.
- அனில் அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானி தொகையை செலுத்த உதவியுள்ளார்.
- எனது மூத்த சகோதாரருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
New Delhi: எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நிலுவைத் தொகையை செலுத்தி சிறை தண்டனையிலிருந்து தொழிலதிபர் அனில் அம்பானியை அவரது சகோதரர் முகேஷ் அம்பானி காப்பாற்றியுள்ளார்.
எரிக்சன் நிறுவனத்திடமிருந்து தொலைத்தொடர்பு சாதனங்களை வாங்கிவிட்டு அதற்குரிய பணத்தை திருப்பிச் செலுத்த தவறிவிட்டது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம்.
இதுதொடர்பாக எரிக்சன் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நான்கு வார காலத்துக்குள் எரிக்ஸன் நிறுவனத்துக்கு பணத்தைத் திரும்ப செலுத்த வேண்டும் என்றும் இல்லாவிடில், 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என அனில் அம்பானிக்கு கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, எரிக்ஸனுக்கு வழங்க வேண்டிய தொகை ரூ. 550 கோடி மற்றும் வட்டித் தொகை ரூ.21 கோடி சேர்த்து மொத்தம் ரூ.571 கோடியாக செலுத்தியுள்ளார் அனில் அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானி.
இந்நிலையில், இதுதொடர்பாக அனில் அம்பானி வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது சகோதரர் முகேஷ் அம்பானிக்கும், முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானிக்கும் அனில் அம்பானி நன்றி தெரிவித்துள்ளார்.
இப்படி நெருக்கடியான நேரத்தில் எனக்கு உறுதுணையாக நின்று தக்க நேரத்தில் உதவியதற்கு நானும், என் குடும்பமும் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என அனில் அம்பானி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சமீபத்தில் மும்பையில் நடந்த முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் திருமணத்தில் அனில் அம்பானி தனது மனைவியுடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.