This Article is From Oct 18, 2018

அவதூறு வழக்கு : 31-ம் தேதி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க எம்.ஜே. அக்பருக்கு உத்தரவு

தனக்கு எதிராக பாலியல் புகார் தெரிவித்த பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு எதிராக அவதூறு வழக்கை எம்.ஜே. அக்பர் தொடர்ந்துள்ளார்

எம்.ஜே. அக்பருக்கு எதிராக 20 பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

New Delhi:
  1. பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மத்திய வெளியுறவு இணை அமைச்சராக இருந்த எம்.ஜே. அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். தனக்கு எதிராக பாலியல் புகார் தெரிவித்த பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு எதிராக அக்பர் அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கு, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நீதிபதி சமர் விஷால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, அக்பர் சார்பாக வழக்கறிஞர் கீதா லுத்ரா ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து வரும் 31-ம்தேதி நேரில் ஆஜராகி எம்.ஜே. அக்பர் தனது வாக்கு மூலத்தை பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி சமர் விஷால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மத்திய வெளியுறவு இணை அமைச்சராக இருக்கும் எம்.ஜே. அக்பர், இந்த பொறுப்புக்கு வருவதற்கு முன்பாக பல்வேறு இதழ்களில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

    அந்த காலகட்டங்களில் பெண் பத்திரிகையாளர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 20 பெண்கள் அக்பருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். அவர்களில் முதலில் புகார் தெரிவித்த பிரியா ரமணி என்கின்ற பத்திரிகையாளர் மீதுதான் மான நஷ்ட வழக்கை அக்பர் தொடர்ந்திருக்கிறார்.

    அக்பருக்கு தொடர்ந்து கட்சிக்கும் உள்ளேயும் எதிர்கட்சிகளும் அழுத்தம் கொடுத்த நிலையில் தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். அப்போது அவர், ‘என்னால் முடிந்த அளவுக்கு தனிப்பட்ட முறையில் நீதியை பெறும் முடிவில் இருந்தேன். சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நான் பதவியை ராஜினாமா செய்வதுதான் பொருத்தமாக இருக்கும். எனவேதான் இந்த முடிவை எடுத்துள்ளேன். நாட்டுக்காக பணி செய்யும் வாய்ப்பை அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறினார்.

    பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்கள், தாங்கள் அனுபவித்த துன்புறுத்தல்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவிக்கும் #MeToo ஹாஷ்டேக் விவகாரம், இந்தியாவில் பெரும் பிரளயத்தைக் கிளப்பி வருகிறது. தமிழ் சினிமாவில், பாடகி சின்மயி, வைரமுத்து மீது புகார் செலுத்தியதன் மூலம் #MeToo விவகாரம், தமிழகத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

.