Fani Update: தேசிய பேரிடர் மீட்பு படையினர் குழு ஒடிசா, ஆந்திரா, மேற்குவங்க பகுதிகளுக்கு விரைந்துள்ளது.
Puri, Odisha: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபனி (Cyclone Fani) புயலானது அதி தீவிரப்புயலாக வலுப்பெற்று ஒடிசாவின் புரி பகுதியில் நாளை மாலை கரையை(Cyclone Fani) கடக்க உள்ளது. இதன் காரணமாக ஒடிசா, தமிழகம், ஆந்திர உள்ளிட்ட கடலோர பகுதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவசர நிலை ஏற்படும் பட்சத்தில், மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் மேற்கொள்ள கடற்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் புரி, ஜகத்சிங்பூர், கேந்திராபாரா, பாத்ராக், பாலாசோர், மாயூர்பாஞ், கஜபதி, கஞ்சம், கோர்தா, கட்டாக் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் காரணமாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்குள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். புயல் காரணமாக ஒடிசாவில் 11 மாவட்டங்களில், தேர்தல் விதமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வானிலை மையத்தால் ஒடிசா மாநிலத்திற்கு நேற்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஒடிசா அரசு இன்று முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது. மேலும், கடற்கரை பகுதிகளில் உள்ள 8 லட்சம் மக்கள் வரை பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆந்திரபிரதேசம், ஒடிசா மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட பிரிவுகளின் விமானப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 41 இடங்கள் பாதிப்பு மிகுந்த பகுதியாக இருக்கும் என தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். ஆந்திரவில் (6) மீட்பு படை குழுக்களும், ஒடிசாவில் (28) மீட்பு படை குழுக்களும், மேற்குவங்கத்தில் (6) மீட்பு படை குழுக்களும் விரைந்துள்ளனர்.
அதி தீவிரப்புயலாக மையம் கொல்லும் போது காற்றின் வேகம் 170 - 180 கி.மீ வேகத்தில் வீசலாம் என்றும் அதிகபட்சமாக 195 - 200 கி.மீ வேகத்திலும் காற்று வீசலாம் என்று கூறப்பட்டுள்ளது.
10 லட்சம் மக்கள் வரை தங்கும் வகையிலான 879 முகாம்கள் ஒடிசாவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
புரியிலிருந்து சுற்றுலா பயணிகள் இன்று மாலைக்குள் வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், மே.3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டங்களில் உள்ள மக்கள் மட்டும் முக்கியமில்லாத பயணங்களை ரத்து செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பயணிகளின் பாதுகாப்பு கருதி, 43-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்காளத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.