This Article is From Aug 29, 2019

ஜம்மூ காஷ்மீர் (J&K) எப்போது உங்களுடையதாக இருந்தது: பாகிஸ்தானுக்கு செக் வைக்கும் ராணுவ அமைச்சர்!

Rajnath Singh: லடாக், யூனியன் பிரதேசமாக பிரித்ததற்குப் பின்னர் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், முதன்முறையாக அங்கு பயணம் செய்துள்ளார்

ஜம்மூ காஷ்மீர் (J&K) எப்போது உங்களுடையதாக இருந்தது: பாகிஸ்தானுக்கு செக் வைக்கும் ராணுவ அமைச்சர்!

Rajnath Singh to Pakistan: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ராணுவ அமைச்சரின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

Leh:

ஜம்மூ காஷ்மீர் எப்போதுமே இந்தியாவின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது என்றும் அதில் பாகிஸ்தானுக்கும் எந்தவித உரிமையும் இல்லை என்றும் பேசியுள்ளார் ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh). லடாக்கில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத், “பாகிஸ்தானிடம் நான் ஒரு விஷயத்தைக் கேட்க விரும்புகிறேன். அது எப்போது உங்களுடைய பகுதியாக இருந்தது. அதற்கு ஏன் இப்போது கண்ணீர் வடிக்கின்றீர்கள்” எனக் கேள்வி எழுப்பினார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ராணுவ அமைச்சரின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

“பாகிஸ்தான் உருவாக்கப்பட்டதில் இருந்து, அந்த நாட்டின் அடையாளத்தை நாம் மதித்து வருகிறோம். பாகிஸ்தானுடன் இந்தியா நல்ல நட்புறவுடன் இருக்க விரும்புகிறது. ஆனால், அவர்கள் இந்தியாவுக்குள் தீவிரவாதத்தை உண்டு செய்வதை நிறுத்த வேண்டும்.” என்று நிகழ்ச்சியின் போது பேசினார். 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்தும், அது இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது குறித்தும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு எதிராக அணிதிரட்ட முயன்று வருகிறது. 

லடாக், யூனியன் பிரதேசமாக பிரித்ததற்குப் பின்னர் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், முதன்முறையாக அங்கு பயணம் செய்துள்ளார். இந்த விசிட்டின்போது, அங்கிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் ஆராய உள்ளார். 

பாகிஸ்தான், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக ஐ.நா சபை பாதுகாப்பு கவுன்சிலில் சமீபத்தில் தீர்மானம் கொண்டு வந்தது. அந்தத் தீர்மானத்துக்கு பெரும்பான்மையான உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு எதிராகவே நிலைப்பாடு எடுத்தன. குறிப்பாக உலக நாடுகள் பலவும், “காஷ்மீர், இந்தியா- பாகிஸ்தான் சம்பந்தபட்ட விவகாரம். அதில் நாங்கள் தலையிட முடியாது” என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டன. 

இப்படி பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில் ராஜ்நாத் சிங், “பாகிஸ்தான், அவர்கள் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களை சரிசெய்ய வேண்டும்” என்றுள்ளார். 

காஷ்மீர் விவகாரத்தை முன்னிருத்தி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவுக்கும் தங்களுக்கும் இடையிலிருந்த ரயில் மற்றும் பேருந்து சேவைகளை நிறுத்தினார். மேலும், இரு நாட்டு உறவையும் அவர் துண்டித்துள்ளார். 

(PTI தகவல்களுடன் எழுதப்பட்டது)

.