2005-ல் மன்மோகன் சிங் அரசு செயல்பட்டது போல, தற்போதைய அரசு செயல்படுமா என்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது
New Delhi: ரஃபேல் ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சிகளோடு இணைந்து செயல்படப் போவதில்லை என்று இந்திய ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் எதிர்கட்சிகள் நடந்து கொண்ட விதத்தை அடுத்து, அவர்களை சேர்த்துக் கொள்ளும் எண்ணம் இல்லை என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இது குறித்து சீதாராமன் மேலும் கூறுகையில், ‘அவர்களை அழைத்துப் பேசுவதில் ஏதேனும் நன்மை இருக்கிறதா? அவர்கள் நாட்டை தவறாக திசைத் திருப்ப முயல்கிறார்கள். ஒரு ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டுகிறீர்கள். ஆனால், விமானப் படையை செயல்படுத்துவது குறித்து யோசிக்க மறுக்கிறீர்கள்’ என்றார்.
2005 ஆம் ஆண்டு, அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தம் போடும் போது, மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, எதிர்கட்சிகளை இணைத்துக் கொண்டு செயல்பட்டதைப் போல, தற்போதைய அரசு ரஃபேல் ஒப்பந்தத்தில் செயல்படுமா என்று கேட்டதற்கு, அமைச்சர் சீதாரமான், ‘இந்த விஷயத்தில் எதிர்கட்சிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லப்பட்டுவிட்டன. இனி அவர்களை அழைத்து என்ன சொல்ல வேண்டும்?’ என்று கேட்டுள்ளார்.
அவர் மேலும், ‘ரஃபேல் ஒப்பந்தத்தை, போஃபர்ஸ் ஒப்பந்தத்துடன் ஒப்பிட முடியாது. ஆனால், எதிர்கட்சிகள் அப்படித்தான் இதை காட்ட முயல்கிறார்கள்’ என்று தெளிவுபடுத்தினார்.
பிரான்ஸிடம் இருந்து 126 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ள இந்தியா, அதை மிக அதிக பணத்துக்கு வாங்குகிறது என்று காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
‘காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசு, ஒரு ரஃபேல் விமானத்தை 526 கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் போட்டது. அதே விமானத்தை தற்போது 1670 கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது’ என்று காங்கிரஸ் தரப்பு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
ஆனால் அமைச்சர் சீதாராமனோ, ‘காங்கிரஸ் ஆட்சியில் ஒப்பந்தமான விமானத்தை விட, தற்போது கையெழுத்தாகியுள்ள விமானத்தில் இருக்கும் பாகங்கள் மிகவும் அதி நவீன தொழில்நுட்பத்தை சார்ந்தது. அதனால் தான் இந்த விலையேற்றம்’ என்று விளக்கியுள்ளார்.
தொடர்ந்து பேசு பொருளாக இருக்கும் இந்த விவகாரம் குறித்து அமைச்சர், ‘ரஃபேல் விவகாரத்தில் ஒரு ஊழலும் நடைபெறவில்லை. ஒரு விஷயமே இல்லாத இதற்கு நாட்டு மக்கள் கவனம் செலுத்துவதே இல்லை. அவர்களுக்கு பிரதமர் மோடி மீது முழு நம்பிக்கை இருக்கிறது’ என்று முடித்தார்.