பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார்.
ஹைலைட்ஸ்
- ராஜ்நாத் சிங் லேவிற்கு நிலைமையை மறு ஆய்வு செய்வதற்காக சென்றுள்ளார்.
- நாட்டின் ஒரு அங்குல பகுதியை கூட அந்நியர்கள் கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம்
- பாதுகாப்புத் ஜெனரல் பிபின் ராவத், எம்.எம். நாரவனே ஆகியோர் உடனிருந்தனர்
Leh/ New Delhi: சமீபத்தில் லடாக்கின் கிழக்குப்பகுதியில் நடைபெற்ற இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. இந்நிலையில் தற்போது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சர்ச்சைக்குரிய பகுதியான லேவிற்கு நிலைமையை மறு ஆய்வு செய்வதற்காக சென்றுள்ளார்.
“தற்போது நடைபெற்று வந்த பேச்சு வார்த்தைகள் மூலமாக எல்லை சம்பந்தமான சிக்கல்கள் எந்த அளவிற்கு தீர்க்கப்படும் என சொல்ல முடியாது. இருப்பினும் நமது நாட்டின் ஒரு அங்குல பகுதியை கூட அந்நியர்கள் கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம் என்பதை நான் உறுதியளிக்கின்றேன்.” என ராஜ்நாத் சிங் ராணுவ வீரர்களுடனான கலந்துரையாடலில் பேசியுள்ளார்.
ராணுவ வீரர்களின் பயிற்சியினை பார்வையிட்ட ராஜ்நாத் சிங்குடன் பாதுகாப்புத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் ராணுவத் தலைவர் ஜெனரல் எம்.எம். நாரவனே ஆகியோர் உடனிருந்தனர். ராஜ்நாத் சிங் இரண்டு நாள் லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டிருப்பதாக பாதுகாப்புத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஏ.என்.ஐ செய்தி ஊடகம் வெளியிட்ட வீடியோவில் ராஜ்நாத் சிங் ராணுவ பயிற்சிகளை பார்வையிடுவது படமாக்கப்பட்டுள்ளது.
பங்கோங் ஏரிக்கு அருகிலுள்ள லுகுங் போஸ்டையும் ராஜ்நாத் பார்வையிட்டார். இந்த பகுதியானது சர்ச்சைக்குரிய ஏரி பகுதியில், ஃபிங்கர் 4 மலைத் தொடருக்கு 43 கி.மீ தொலைவில் உள்ளது. இப்பகுதியில் இந்திய ராணுவமும் இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறையும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதன் பின்னர் ஸ்ரீநகருக்கு சென்று கட்டுப்பாட்டுக் கோட்டின் நிலைமையை மதிப்பாய்வு செய்வார். ராஜ்நாத் ஜூலை 3 ம் தேதி லடாக் செல்ல திட்டமிடப்பட்டிருந்தார், ஆனால் அவரது வருகை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக ஜூலை 3 ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, லடாக், நிமுவிற்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டார், மேலும் 11,000 அடி உயரத்தில் ராணுவ துருப்புக்களுடன் உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.