This Article is From Jul 01, 2020

சீனாவுடனான எல்லை மோதல்! லடாக்கில் ஆய்வு மேற்கொள்கிறார் ராஜ்நாத் சிங்

மத்திய அரசு சீனாவின் முதலீட்டுடன் இயங்கி வரும், டிக்டாக், ஹலோ உள்பட 59 ஆப்களுக்கு தடை விதித்து நடவடிக்கை எடுத்தது. இதிலிருந்து மீள்வதற்கு அந்த நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

சீனாவுடனான எல்லை மோதல்! லடாக்கில் ஆய்வு மேற்கொள்கிறார் ராஜ்நாத் சிங்

பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தவுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • லடாக் எல்லையில் பாதுகாப்பு அமைச்சர் வெள்ளியன்று ஆய்வு மேற்கொள்கிறார்
  • பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் முக்கிய ஆலோசனை நடத்துவார்
  • சீன அத்துமீறல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்படவுள்ளது
New Delhi:

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக்கில் சுற்றுப் பயணம் செய்து, அங்கு பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளிக் கிழமை அவரது பயணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் 15-ம்தேதி லடாக்கில் இந்திய ராணுவத்தினர் மீது சீன ராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் தமிழக வீரர் பழனி உள்பட 20 பேரை இந்திய ராணுவம் இழந்தது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. முடிவில் இரு நாட்டு படைகளும் திரும்பப் பெறப்பட்டன.

அடுத்த கட்டமாக மத்திய அரசு சீனாவின் முதலீட்டுடன் இயங்கி வரும், டிக்டாக், ஹலோ உள்பட 59 ஆப்களுக்கு தடை விதித்து நடவடிக்கை எடுத்தது. இதிலிருந்து மீள்வதற்கு அந்த நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்த சூழலில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், லடாக்கில் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு நடத்தவுள்ளார். இதற்காக அவர் நாளை மறுதினம் லடாக் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கு பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, சீனாவுடனான பிரச்னையை எதிர்கொள்வது, மீண்டும் சம்பவம் நடைபெறாமல் இருக்க செய்ய வேண்டிய பணிகள் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.