பூஜைக்குப் பின்னர் முதல் ரஃபேல் விமானத்தை பெறுகிறார் ராஜ்நாத் சிங்
New Delhi: மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவிடம் பிரான்ஸ் அளிக்கும் முதல் ரஃபேல் விமானத்தை பெறுகிறார். தொடர்ந்து, அந்நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்வீட்டர் பதிவில், 87வது பிறந்தநாளை கொண்டாடும் இந்திய விமானப்படைக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்த அவர், பிரான்ஸூடனான உறவு முறை குறித்து விளக்கினார். அதில், இந்த மாபெரும் நாடு இந்தியாவின் முக்கியமான மூலோபாய கூட்டாளியாகும்.
மேலும், எங்கள் சிறப்பு உறவானது, ஒப்பந்தங்களுக்கு அப்பாற்பட்டது. எனது பிரான்ஸ் பயணம் என்பது, இருநாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள உறவுமுறையை விரிவுபடுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் எவியேசன் நிறுவனத்திடம் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க கடந்த 2016ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி, தயாரிக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானம் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த நிலையில், ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து விமானத்தில் பிரான்ஸ் தலைநகரான பாரீஸூக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார்.
பிரான்சில் அந்நாட்டு அதிபர் மேக்ரானை சந்திக்கும் ராஜ்நாத் சிங், இருநாட்டு பாதுகாப்பு, ராணுவ உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதனை தொடர்ந்து, இந்தியாவிடம் பிரான்ஸ் அளிக்கும் முதல் ரஃபேல் விமானத்தை பெற்று, அதில் பயணம் செய்ய உள்ளார்.
துறைமுக நகரான பார்டியாக்ஸ் நகரில் இதற்கான நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதில், முதல் ரஃபேல் விமானத்தை பிரான்ஸ் அரசிடமிருந்து ராஜ்நாத் சிங் பெறுகிறார்.
தசரா மற்றும் இந்திய விமானப் படை நிறுவப்பட்ட நாளையொட்டி இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்திய விமானப்படை நிறுவப்பட்டு இன்று 87வது ஆண்டை ஆடைகிறது. இதற்காக ராஜ்நாத் சிங் தனது ட்வீட்டர் பதிவில், இந்த நாளில் அனைத்து இந்திய விமானப்படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது நாட்டிற்கு முன்மாதிரியான தைரியம், துணிச்சல், உறுதி மற்றும் அப்பழுக்கற்ற சேவை ஆகியவற்றின் உதாரணம். நீல நிற உடையில் உள்ள இந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் வானத்தைத் தொடும் திறன் உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் இன்று காலை தனது ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, பூஜைக்குப் பின்னர் ராஜ்நாத் சிங் அந்த விமானத்தில் பறக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.