ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்க்கெல் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
New Delhi: டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், காற்று மாசை குறைக்கும் தீர்வுகளில் ஒன்றாக தமிழ்நாட்டின் நடவடிக்கையை கடைபிடிக்க வேண்டும் என்றும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்க்கல் கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் மூச்சை திணறடிக்கும் காற்று மாசுபாடு காரணமாக அங்கு சுகாதார எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர்க்கழிவுகள் புகைதான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், டெல்லியில் அதிகளவு பயன்படுத்தப்படும் டீசல், பெட்ரோல் எரிபொருள் வாகனங்களும் காற்று மாசில் முக்கிய பங்கை வகிக்கின்றன.
இந்த நிலையில்தான் ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்க்கெல் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்துள்ளார். அவரையும் டெல்லியின் காற்று மாசு பாதித்துள்ளதாக தெரிகிறது.
டெல்லியில் நடைபெற்ற வர்த்தக கூட்டத்தில் பங்கேற்ற ஏஞ்செலா மெர்க்கெல், தமிழகத்தை சுட்டிக்காட்டி டெல்லி காற்று மாசுக்கு தீர்வு கூறியுள்ளார்.
அவர் தனது பேட்டியில், 'சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத மின்சார பேருந்துகளை தமிழ்நாட்டிற்கு ரூ. 1500 கோடி ஒப்பந்தத்தின் கீழ் வழங்கியுள்ளோம். காற்று மாசால் பாதிக்கப்படும் டெல்லியும் டீசல், பெட்ரோல் எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின்சாரத்தால் இயங்கும் பேருந்துகளை பயன்படுத்தலாம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெர்மன் நாட்டில் இருந்து தமிழகத்திற்கு காற்று மாசு ஏற்படுத்தாத 2,213 பி.எஸ். 4 ரக பஸ்களும், 500 மின்சார பஸ்களும் ரூ. 1,580 கோடி செலவில் வாங்குவதற்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாலை முன்னிலையில் கையெழுத்தானது.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்திற்கு பேருந்துகள் வழங்கப்பட்டு அவை சென்னையில் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் நடவடிக்கையை டெல்லி காற்று மாசுக்கு ஒரு தீர்வாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்க்கெல் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.