காற்று மாசு காரணமாக பள்ளி குழந்தைகளுக்கு முக மூடிகள் வழங்கப்பட்டுள்ளன.
New Delhi: காற்று மாசு டெல்லியில் குறையாத சூழலில், பள்ளிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், அங்கு காற்று மாசுபாடு குறைந்தபாடில்லை.
இந்த பிரச்னைக்கு அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானாவில் எரிக்கப்படும் விவசாய கழிவுகளே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனை தவிர்த்து டெல்லி வாகனங்கள் உபயோகம், கட்டிட வேலைப்பாடுகள், தீபாவளியன்று வெடித்து தள்ளப்பட்ட பட்டாசுகள் உள்ளிட்டவையும் டெல்லியில் காற்று மாசை தக்க வைத்துக் கொண்டுள்ளன.
இந்த நிலையில், காற்று மாசு குறையாத சூழலில் 2 நாட்களுக்கு டெல்லி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி காற்று மாசின் தற்போதைய நிலைமை குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
டெல்லிக்கு உட்பட்ட மாவட்டங்களில் புகையை வெளியேற்றும் தொழிற்சாலைகள், கல் குவாரிகள் உள்ளிட்டவை நவம்பர் 15-ம்தேதி வரை மூடியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பரிதாபாத், குருகிராம், நொய்டா, கிரேட்டர் நொய்டா, சோனிப்பட், பானிப்பட், பந்துர்கர், பிவாண்டியில் செயல்படும் அனைத்து நிலக்கரி மற்றும் எரிபொருள் தொழிற்சாலைகள் நவம்பர் 15-ம்தேதி வரை மூடப்பட்டிருக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.