'ஒரு வானிலை தளம் ஆரம்பித்து, அனைத்தையும் விளக்கமாக சொல்லுங்கள் சார். நாங்கள் உங்களிடமிருந்து கற்றுக் கொள்கிறோம்'- Tamilnadu Weatherman
தலைநகர் டெல்லி (Delhi)மற்றும் வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் காற்று மாசு (Air Pollution) படுமோசமாக இருக்கும் நிலையில், சென்னை மற்றும் தமிழகத்துக்கு (Chennai) அதன் பாதிப்பு இருக்கும் என்று சிலர் சொல்லி வருகின்றனர். அப்படியிருக்க வாய்ப்பே இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தொடர்ந்து மறுத்து வருகிறது. இருப்பினும் பிரபல வானிலை கணிப்பாளரான, தமிழ்நாடு வெதர்மேன் (Tamilnadu Weatherman), பிரதீப் ஜான், எழுப்பியுள்ள சந்தேகங்கள் பல கேள்விகளை நம் முன் வைக்கின்றன.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின், சென்னை மண்டல முன்னாள் இயக்குநர், ரமணன், டெல்லி மற்றும் வட இந்திய காற்று மாசுவினால் தமிழகத்துக்கு பாதிப்பு இருக்காது என்று சொல்லியிருப்பதை கேலி செய்யும் வகையில் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் வெதர்மேன்.
“சென்னை மற்றும் தமிழகத்தில் மாசு காற்று இல்லை. வாகனப் புகையை யாரோ கலந்துவிட்டார்கள் போல. டெல்லி வெகு தொலைவில் இருக்கிறது. நாம் வேலையைப் பார்ப்போம்.
ரமணன் சார், விண்டு சார்ட் வைத்து நல்ல விளக்கம் கொடுக்கிறீர்கள். முதன்முறையாக. மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், செய்திதான் ஒருதலைபட்சமாக இருக்கிறது. பொது மக்களுக்கு நீங்கள் காண்பிக்கும் விஷயங்கள் புரியாது அல்லவா.
இதைப் போன்ற ஒரு விளக்கத்தை புயல் வரும்போதோ, 2015 பெரு வெள்ளம் வரும்போதோ உங்களிடமிருந்து பார்க்கவில்லையே… ஒரு வானிலை தளம் ஆரம்பித்து, அனைத்தையும் விளக்கமாக சொல்லுங்கள் சார். நாங்கள் உங்களிடமிருந்து கற்றுக் கொள்கிறோம்,” என்று சூசகமாக சொல்லியிருக்கிறார்.
டெல்லி காற்று மாசுவினால், தமிழகத்துக்கு பாதிப்பு இருப்பதாக தனியார் வானிலை வல்லுநர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், இந்திய வானிலை மையத்தின் அதிகாரிகள், அப்படி ஒரு விஷயம் நடக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்து வருகிறார்கள்.