காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் மகன் ரைஹானுடன் உள்ளார்.
New Delhi: டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது மகன் மற்றும் கணவருடன் வந்து வாக்களித்தார். செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பிரியங்காவின் மகன் ரைஹான் அளித்த பதில்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளது. முதன்முறையாக ரைஹான் தேர்தலில் வாக்களிக்கிறார்.
வாக்களித்த பின்னர் ரைஹான் அளித்த பேட்டியில், 'ஜனநாயக கடமைகளில் பங்கேற்பதை மகிழ்ச்சியாக உணர்கிறேன். கடந்த தேர்தலில் வாக்களிப்பதாக இருந்தேன். ஆனால் தேர்வு காரணமாக முடியாமல் போய் விட்டது. ஒவ்வொருவரும் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்' என்றார்.
முன்னதாக, செய்தியாளர்கள் பிரியங்காவிடம்தான் மைக்கை நீட்டினார்கள். ஆனால் அவரோ மகனிடம் கேள்விகளை கேட்குமாறு கூறினார்.
ரைஹானிடம் எதற்கு வாக்களித்தீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு அவர் அளித்த பதிலில்,'நான் டெல்லியில்தான் வசித்து வருகிறேன். எனது இந்த நகரம் வளர்ச்சியடைவதை நான் பார்க்க வேண்டும். உலகில் சிறந்த நகரமாக இது மாற வேண்டும். நான் மக்களுக்காக வாக்களித்துள்ளேன்' என்று பதில் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, புதிதாக அமையும் அரசு எந்த பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து, அதனை தீர்க்க வேண்டும் என கருதுகிறீர்கள் என்று ரைஹானிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கான பதிலை, பிரியங்காவும் எதிர்பார்த்திருந்தார். இந்த கேள்விக்கு பதில் அளித்த ரைஹான், 'டெல்லி மக்கள் ஒவ்வொருவரும் அரசு போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு இந்த வசதி மானிய முறையில் கிடைக்க வேண்டும்' என்று கூறினார்.
இதேபோன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகன் புல்கிட்டும் இந்த தேர்தலில் வாக்களித்தார். அவரிடம் உங்கள் தந்தை அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக வருவாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர், 'மக்கள் யாரை தேர்வு செய்கிறாரோ அவர்தான் டெல்லி முதல்வராக வருவார்' என்று பதில் அளித்தார்.
இந்த தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி காணப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பிரசாரம் செய்தாலும் அக்கட்சி 3 வது இடத்திற்கு தள்ளப்படும் என்றே தகவல்கள் வெளியாகியுள்ளது.