டெல்லி தேர்தலில் பாஜக 8 இடங்களிலும், ஆம் ஆத்மி 62 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
New Delhi: டெல்லி தேர்தலின்போது பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பெரும்பான்மையான இடங்களில் அக்கட்சி தோல்வியடைந்துள்ளது. புள்ள விவரங்கள் இந்த தகவலை தெரிவிக்கின்றன.
பாஜகவின் நட்சத்திர பேச்சாளரான உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 12 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். இவற்றில் 3 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. டெல்லி தேர்தலில் பாஜக 8 இடங்களிலும், ஆம் ஆத்மி 62 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
மொத்தம் 4 நாட்கள் பிரசாரம் செய்த யோகி ஆதித்யநாத், பத்பர்கஞ்ச், கிராரி, மெஹ்ராலி, உத்தம் நகர், துவாரகா, துக்ளகாபாத்,விகாஸ்புரி, ரோஹினி, கரவால் நகர், ஜகாங்கிர்பூர், பாதர்பூர் ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார்.
தனது பிரசாரத்தின்போது, ஷாகின் பாக் போராட்டக்காரர்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரியாணியை சப்ளை செய்கிறார் என்று ஆதித்யநாத் பேசினார். இதற்காக தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
பாதர்பூர், கரவால் நகர், ரோஹிணி ஆகிய தொகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் பாஜக வேட்பாளர்கள் ஆம் ஆத்மி கட்சியிடம் தோல்வியை தழுவினர்.
இதேபோன்று ஜானக்புரியில் டெல்லி மேற்கு மக்களவை தொகுதி எம்.பி. பர்வேஷ் வர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இங்கு பாஜக வேட்பாளர் ஆஷிஷ் சூட், ஆம் ஆத்மியின் ராஜேஷ் ரிஷியிடம் 14,917 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
எம்.பி. பர்வேஷ் வர்மா, 'காஷ்மீரில் பண்டிட்டுகளுக்கு என்ன நடந்ததோ அதேபோன்று டெல்லியிலும் நடக்கும். லட்சக்கணக்கான மக்கள் ஷாகீன் பாக்கில் கூடியுள்ளனர். அவர்கள் வீட்டிற்குள் புகுந்து உங்களது சகோதரிகள், மகள்களை பலாத்காரம் செய்து விட்டு கொன்று விடுவார்கள்' என்று பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பர்வேஷ் வர்மாவுக்கு 4 நாட்கள் பிரசாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு ஷாகீன் பாக் மையப்புள்ளியாக விளங்கியது. இதனை சுட்டிக்காட்டி பாஜக தலைவர்கள் பலர் பிரசாரம் மேற்கொண்டிருந்தனர்.
எம்.பி. பர்வேஷ் வர்மாவின் மாமனாரும், முந்த்கா தொகுதியின் பாஜக வேட்பாளருமான ஆசாத் சிங் ஆம் ஆத்மியின் தரம்பால் லக்ராவிடம் 19, 158 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
ரித்தாலா தொகுதியில் பாஜக வேட்பாளர் மணிஷ் சவுத்ரிக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பிரசாரம் செய்தார். பொதுக்கூட்டத்தின்போது துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள் என்று அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தலில் பாஜக வேட்பாளரை 13,817 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மியின் மோகிந்தர் கோயல் வீழ்த்தினார்.
மாடல் டவுண் தொகுதியில் பாஜக வேட்பாளராக கபில் மிஷ்ரா போட்டியிட்டார். பிரசாரத்தின்போது ட்வீட் செய்த அவர், டெல்லி தேர்தல் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்சை போன்றது என்று பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த தேர்தல் ஆணையம் 48 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய மிஷ்ராவுக்கு தடை விதித்தது.
தேர்தலில் ஆம் ஆத்மியின் அகிலேஷ் பதி திரிபாதியிடம் கபில் மிஷ்ரா தோல்வி அடைந்தார்.