200 எம்.பி.க்கள் 70 அமைச்சர்கள், 11 மாநில முதல்வர்களை டெல்லிக்கு வெளியேயிருந்து பாஜக அழைத்து வந்துள்ளது என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
New Delhi: வெளி மாநிலத்தவரை தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்து வந்திருப்பதன் மூலம் டெல்லி மக்கள் பாஜக அவமானப்படுத்தி விட்டதாக அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 8-ம்தேதி நடைபெறுகிறது. முடிவுகள் பிப்ரவரி 11-ம்தேதி அறிவிக்கப்படவுள்ளன.
.
இந்த முறை ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி காணப்படுகிறது. இந்த நிலையில், கோகப்லூரி சட்டமன்ற தொகுதியில் கட்சி வேட்பாளர் சுரேந்திர குமாரை ஆதரித்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். அப்போது அவர் கூறியதாவது-
200 எம்.பி.க்கள் 70 அமைச்சர்கள், 11 மாநில முதல்வர்களை டெல்லிக்கு வெளியேயிருந்து பாஜக அழைத்து வந்துள்ளது. டெல்லியில் இருப்பவர்களை மக்கள் ஆதரிக்கவில்லை. எனவேதான் வெளியில் இருந்து ஆட்களை பாஜக அழைத்து வந்துள்ளது. அவர்களெல்லாம் டெல்லி மக்களை வீழ்த்த வந்துள்ளனர்.
அவர்கள் மண்ணின் மைந்தனான கெஜ்ரிவாலை வீழ்த்த வந்துள்ளனர். டெல்லி மக்களை அவமானப்படுத்த வெளியில் இருந்து பிரசாரத்திற்கு பாஜக ஆட்களை அழைத்து வந்துள்ளது. அவர்கள் இங்கே வந்து உங்கள் பள்ளிகள் மோசமான நிலையில் உள்ளன, தெருக்கள் அலங்கோலமாக இருக்கிறது என்றெல்லாம் பேசுவார்கள். அப்போது நீங்கள் அமைதியாக இருப்பீர்களா?
இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார். அவர் கேட்ட கேள்விக்கு கூடியிருந்தவர்கள் இல்லை இல்லை என்று பதில் அளித்தனர்.