காவலர்களை மனோஜ் திவாரி தாக்கியதாக வந்த தகவல்களை திவாரி மறுத்துள்ளார்.
New Delhi: டெல்லியில் கடந்த ஞாயிறன்று சிக்னேச்சர் எனப்படும் பாலம் ஒன்று திறக்கப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்கு அம்மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இருப்பினும், விழா மேடைக்கு சென்ற அவரை காவலர்கள் தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், காவலர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கினார். இந்த காட்சிகள் அனைத்தும் நேரடியாக டிவிக்களில் ஒளிபரப்பப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், தன்னை தடுத்து நிறுத்தி, தாக்குதல் நடத்தியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் போலீசார் சிலர் மீது மனோஜ் திவாரி வடகிழக்கு டெல்லியில் உள்ள காவல் இணை ஆணையர் அலுவலத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் தனது புகாரில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தூண்டுதல் பேரில், அமானதுல்லா கான் என்பவர் எனது ஆதரவாளர்கள் முன்னிலையில் உடல் ரீதியாக என்னை தாக்கினார். என்னை கொல்ல வேண்டும் அல்லது எனக்கு காயம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் என்னை நோக்கி வந்து என்னை தள்ளி விட்டார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், டெல்லி போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்துள்ளார். அதில், “ மனோஜ் திவாரி தாக்கியது தொடர்பான வீடியோக்கள் வெளிவந்துள்ளன. சம்பவம் நடந்து 48 மணி நேரத்திற்கும் அதிகமாக ஆகியும் நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளதாகவும் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.