ஹைலைட்ஸ்
- காஷிஷ் பன்சால் வீட்டிலிருந்து குர்கானுக்கு காரில் சென்றுகொண்டிருந்தார்
- டெல்லியின் நாராயணா மேம்பாலத்தில் பைக்கில் வந்த மூவர் காஷிஷை வழிமறித்தனர்
- வண்டி டிக்கியில் இருந்து 70 இலட்சத்தை எடுத்துக்கொண்டு ஓட்டம்
New Delhi: தில்லியின் பரபரப்பான நாராயணா மேம்பாலத்தில் பட்டப்பகலில் தொழிலதிபரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி 70 இலட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழன் அன்று நடந்த இச்சம்பவத்தை அவ்வழியாகச் சென்றவர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
காஷிஷ் பன்சால் (40) தன் வீட்டிலிருந்து குர்கானுக்குக் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது மேற்கு டெல்லியில் பரபரப்பாகக் காணப்படும் நாராயணா மேம்பாலத்தில் மோட்டார் பைக்கில் வந்த மூவர் இவரை வழிமறித்து நிறுத்தினர். பின் காரின் டிக்கியில் இருந்த 70 இலட்சம் பணத்தினைக் திருடிக்கொண்டு தப்பிவிட்டனர் என போலிஸ் தரப்பு தெரிவிக்கிறது.
இச்சம்பவத்தின் வீடியோ பதிவினை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் வெள்ளை நிறக் கார் சாலை நடுவே இருவரால் நிறுத்தப்படுகிறது. அதில் ஒருவன் துப்பாக்கியோடு காருக்கு வெளியே நிற்கிறான். பயணிகள் சீட்டில் தொழிலதிபர் அமர்ந்திருக்கிறார். திருடர்களில் ஒருவன் இடக்கையில் துப்பாக்கியைப் பிடித்தபடி தொழிலதிபரின் காலரைப் பிடித்துக்கொண்டு அவரைக் காரை விட்டு வெளியேறாதவாறு தடுக்கிறான்.
பட்டப்பகலில் நடக்கும் இச்சம்பவத்தை அவ்வழியாகச் செல்வோர் தங்களது வண்டியை நிறுத்திவிட்டு செய்வதறியாது திகைத்துப் பார்க்கின்றனர்.
ஒருவழியாக சமாளித்து காரில் இருந்து கீழே இறங்கும் காஷிஷ், சாலையின் மறுபுறத்துக்கு ஓடுகிறார். தற்போது மேலும் இரு கொள்ளையர்கள் வீடியோவில் தெரிகிறார்கள். அதில் ஒருவன் தொழிலதிபர் தங்களை நோக்கி வர துப்பாக்கியைக் காட்டுகிறான்.
இவ்வாறாக அந்த வீடியோ காட்சிகள் உள்ளன.
கொள்ளையர்களுக்கு பணம் இருக்கும் இடம் வரை தெரிந்திருப்பதால், தொழிலதிபருக்கு அறிமுகமுள்ள யாரோ ஒருவர்தான் இதனை நன்கு திட்டமிட்டுச் செய்திருக்க வேண்டும் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.