Delhi CAA Clashes: "சிஏஏ போராட்டங்கள் இஸ்லாமியர்கள் போரோ, இந்துக்கள் போரோ அல்ல; இந்தியர்களைக் காக்கும் குடியுரிமைப் போர்!"
ஹைலைட்ஸ்
- டெல்லி சிஏஏ கலவரங்களால் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் பலி
- 150-க்கும் மேற்பட்டோருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது
- தொடர்ந்து டெல்லியில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது
Delhi CAA Clashes: டெல்லியில் சிஏஏ ஆதரவு மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு மத்தியில் நடந்து வரும் கலவரச் சம்பவங்களால் மணிக்கு மணி பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தலைநகரில் நிலைமை இன்னமும் முழுமையாகக் கட்டுக்குள் வராத நிலையில், சிஏஏ குறித்தான விவாதங்களும் சூடுபிடித்துள்ளன. சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏ குறித்த அறிவிப்பு வந்ததிலிருந்து அதை எதிர்த்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகக் காட்டமாகப் பேசியுள்ளார்.
சென்னை, ராயப்பேட்டையில், “தமிழக மக்கள் ஒற்றுமை மேடை” சார்பில் 'குடியுரிமை பாதுகாப்பு மாநாடு' நடந்தது. பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்திற்குத் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர் என்.ராம், அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய ஸ்டாலின், “நாட்டின் தலைநகர் வன்முறை மயமான நிலையில், உள்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க மனமில்லையா? சிஏஏ போர் என்பது இந்தியர்களைக் காப்பதற்கான போர்.
டெல்லி கலவரங்களின்போது, உள்துறை அமைச்சர் என்ன செய்தார்? சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறினரா? அல்லது மனமில்லையா? சிஏஏ போராட்டங்கள் இஸ்லாமியர்கள் போரோ, இந்துக்கள் போரோ அல்ல; இந்தியர்களைக் காக்கும் குடியுரிமைப் போர்!
இன்று அனைவரும் ஒன்றாக எதற்குக் கூடியிருக்கிறோம். பாஜக ஆட்சியை எதிர்ப்பதற்கு அல்ல. இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக.
இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறுங்கள். என்ஆர்சி மற்றும் என்பிஆர் பணிகளை நிறுத்துங்கள். இதுவே எங்களின் அழுத்தம் திருத்தமான கோரிக்கை,” என்று பேசினார்.